10 கிமீ மேல் பயணம் செய்து மாணவர்கள் தேர்வெழுதும் அரசு பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை: சிஇஓக்களுக்கு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு

ேசலம்: தமிழகத்தில் 10 கி.மீ. மேல் பயணம் செய்து தேர்வு மையங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்காக, அரசுப்பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது. பொதுத்தேர்வுக்காக தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஏற்கனவே உள்ள தேர்வு மையங்களில் ரத்து செய்ய வேண்டியவை மற்றும் புதிதாக தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டியவை குறித்த விவரங்கள் மாநிலம் முழுவதும் பெறப்பட்டு வருகிறது. அத்துடன், 10 கி.மீ. மேல் பயணம் செய்து தேர்வு மையங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்காக, அரசுப்பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வுகள் இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் 2023-2024ம் கல்வி ஆண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்குரிய தேர்வு மையங்கள் அமைத்தல் தொடர்பான கருத்துருக்கள் சிஇஓக்களிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது. தங்கள் மாவட்டத்திலுள்ள பள்ளிகளிலிருந்து, நடப்பு கல்வியாண்டு பொதுத் தேர்வுகளுக்கான புதிய தேர்வு மையங்கள் கோரும் கருத்துருக்களை அனுப்பி வைக்க பள்ளிகளுக்கு சிஇஓக்கள் தெரியப்படுத்த வேண்டும்.

அதன்பின் பள்ளிகளிலிருந்து பெறப்படும் கருத்துருவினைப் பரிசீலினை செய்து, அப்பள்ளிகளை நேரில் பார்வையிட்டு கருத்துருவை அனுப்ப வேண்டும். புதிய தேர்வு மையங்கள் கோரி கருத்துரு அனுப்பப்படும் பொழுது, திட்டவட்டமான சிஇஓகளின் குறிப்புரை இருக்க வேண்டும். கடந்த ஆண்டு தேர்வுக்காக ஓராண்டிற்கு மட்டும் தேர்வு மையம் அமைக்க அனுமதிக்கப்பட்ட பள்ளிகள், தொடர்ந்து தேர்வு மையமாக செயல்பட வேண்டும் என்றால், சென்ற ஆண்டு வழங்கப்பட்ட ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யப்பட்டிருப்பின் மீண்டும் கருத்துரு அனுப்பி, இயக்குநரின் ஆணை பெறவேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியை நேரில் ஆய்வு செய்த பின், அவசியம் தேர்வு மையமாக அமைத்தே ஆக வேண்டும் என்பதற்கான காரணத்தை விளக்கி பரிந்துரைக்க வேண்டும்.

சிஇஓக்களின் பரிந்துரையின்றியும், உரிய காலக்கெடுவிற்குப் பின்னரும் பெறப்படும் கருத்துருக்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். புதிய தேர்வு மையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்படும் பள்ளிகள், விதிகளின்படி தேர்வு மையங்களாக செயல்பட தகுதியுள்ளதை உறுதி செய்த பின் பரிந்துரைக்க வேண்டும். விதிகளின்படி இல்லாத பள்ளிகளைத் தேர்வு மையம் வேண்டி பரிந்துரை செய்து அனுப்பினால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், 10 கி.மீ. தூரத்திற்கு மேல் பயணம் செய்து தேர்வெழுத தேர்வு மையங்களுக்குச் செல்லும் மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளில், புதிய தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பரிந்துரை செய்யப்படும் புதிய தேர்வு மையங்கள் ஏதும் இல்லை எனில் `இன்மை அறிக்கை` அனுப்ப வேண்டும். தற்பொழுது தேர்வு மையங்களாக செயல்படும் மையங்களில், ரத்து செய்யப்பட வேண்டிய தேர்வு மையங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றை உரிய காரணங்களுடன் பட்டியலிட்டு அனுப்ப வேண்டும். நடப்பு கல்வியாண்டு 2023-2024 பொதுத்தேர்விற்கு ஏற்கெனவே தேர்வுமையமாக செயல்பட்டு வரும் பள்ளிகள், புதிய தேர்வு மையம் கோரும் பள்ளிகள் அனைத்தும் அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தேர்வு மையமாக செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது. மாவட்டத்திலுள்ள பள்ளிகளிலிருந்து பெறப்பட்ட புதிய தேர்வு மையம் கோரும் கருத்துருக்களையும், சம்பந்தப்பட்ட படிவங்களையும் வரும் 5ம் தேதிக்குள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் நேரடியாக சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post 10 கிமீ மேல் பயணம் செய்து மாணவர்கள் தேர்வெழுதும் அரசு பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை: சிஇஓக்களுக்கு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: