1066 கனஅடி தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி, செப்.24: கிருஷ்ணகிரி அணையில் இருந்து 1066 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால், 2வது நாளாக 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் நந்திமலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை வழியாக, கிருஷ்ணகிரி கேஆர்பி அணையை வந்தடைகிறது. பின்னர் தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது. இந்நிலையில், கெலவரப்பள்ளி அணையின் மதகுகள் பராமரிப்பு பணி தற்போது நடந்து வருவதால் கர்நாடகாவில் இருந்து வரும் 200 கனஅடி தண்ணீர், ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆந்திராவில் பெய்யும் மழையாலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையாலும் நேற்று முன்தினம் கேஆர்பி அணைக்கு நீர்வரத்து 1066 கனஅடியாக அதிகரித்தது.

அணையின் பாதுகாப்பு கருதி, அந்த தண்ணீர் ஆற்றில் அப்படியே திறந்து விடப்படுவதால், 5 மாவட்டங்களுக்கு நேற்று முன்தினம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 669 கனஅடியாக சரிந்துள்ளது. இருப்பினும் ஆற்றில் 1066 கனஅடி தண்ணீர் திறந்து விட்டுள்ளதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு தொடர்ந்து நேற்று 2வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது 50.35 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

The post 1066 கனஅடி தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: