‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின் 2ம் கட்ட தூய்மைப்பணிகள் தொடக்க விழா

 

திருவள்ளூர்: ஊரக வளர்ச்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் வாயிலாக “நம்ம ஊரு சூப்பரு” விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த மே மாதம் முதல் ஜூன் 23ம் ஆண்டு வரையிலான காலத்தில் நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நேற்று முதல் வருகிற டிசம்பர் 9ம் தேதி வரையிலான காலத்தில் ஒவ்வொரு மாதத்தின் 2 மற்றும் 4ம் சனிக்கிழமைகளில் பொது இடங்களில் பெருமளவில் தூய்மை பணி மேற்கொள்ளுதல், நலவாழ்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தூய்மை காவலர்கள் மற்றும் இதர துப்புரவு பணியாளர்களுக்கு ஏற்படுத்துதல், பசுமை மற்றும் தூய்மை கிராமங்களை உருவாக்குதல்,

மகளிர் குழுக்கள் மூலம் வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நெகிழி பயன்படுத்துவதை தடுத்தல் மற்றும் நெகிழிக்கு மாற்று பொருட்களை உபயோகப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுகாதாரம் மற்றும் குடிநீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன. அதன்படி, திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை பல்வேறு துறைகளோடு இணைந்து சுகாதாரம் மற்றும் குடிநீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி “தூய்மை திருவள்ளூர்” நிலையை தக்க வைக்கும் பொருட்டு, சுகாதாரப் பணிகள் மேற்கொள்வதற்காக செயல்படுத்தப்படும் “நம்ம ஊரு சூப்பரு” திட்டத்தின் இரண்டாம் கட்ட தூய்மைப் பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது.

சுற்றுப்புற தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார். முன்னதாக சுற்றுப்புற தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். மேலும் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் ”நம்ம ஊரு சூப்பரு\” திட்டத்தின் இரண்டாம் கட்ட தூய்மைப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

The post ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின் 2ம் கட்ட தூய்மைப்பணிகள் தொடக்க விழா appeared first on Dinakaran.

Related Stories: