புரட்டாசி முதல் சனிக்கிழமையில், பெருமாளை தரிசனம் செய்வோம். சகல செளபாக்கியங்களையும் தந்தருள்வார்.
புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில், தினமும் பெருமாளை வழிபடுவது உன்னதமானது. வழிபாட்டுக்கு உரியது புரட்டாசி மாதம். வேண்டுதலுக்கு உரிய மாதம் இது. வேண்டுதலையும் நேர்த்திக்கடனையும் செலுத்துகிற மாதமும் இதுவே.
புரட்டாசி மாதத்தில் குலதெய்வத்தை அவசியம் வழிபடுவார்கள். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் பார்த்துவிட்டு, விரதம் மேற்கொள்வார்கள். பின்னர் மாலையில் பெருமாளை மீண்டும் தரிசித்துவிட்டு, விரதத்தை நிறைவு செய்வார்கள்.
புரட்டாசி மாதத்தில், வெங்காயம், பூண்டு தவிர்ப்பார்கள் பலரும். அதேபோல் அசைவம் சேர்க்கமாட்டார்கள். ஏனென்றால், வழிபாட்டுக்கும் விரதத்துக்கும் உரிய புரட்டாசி மாதத்தில், வேங்கடவனை தரிசிப்பதும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் மகத்தான பலன்களையெல்லாம் வழங்கக் கூடியவை என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
குருவாரம் எனப்படும் வியாழக்கிழமையில், புரட்டாசி மாதம் உதயமாகியுள்ளது. நாளைய தினம் புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமை. முதல் சனிக்கிழமை. பொதுவாகவே, பெருமாளுக்கு உரிய நாள் சனிக்கிழமை. அதிலும் புரட்டாசியும் சரி… சனிக்கிழமையும் சரி… பெருமாளுக்கு உகந்தவை.
நாளைய தினம் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை. இந்த நன்னாளில், பெருமாளை மனதார வழிபடுங்கள். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று பெருமாளையும் தாயாரையும் மனதார வழிபடுங்கள். பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வழிபடுங்கள். தாயாருக்கு மல்லிகைப் பூ மாலை சார்த்தி வழிபடுவது சகல ஐஸ்வரியங்களையும் பெற்றுத் தரும்.
ஆலயத்தில் பெருமாளை வழிபாடு செய்துவிட்டு, வீட்டுக்கு வந்து பெருமாளுக்கு புளியோதரை அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து மனதார வழிபடுங்கள். அக்கம்பக்கத்தாருக்கு பிரசாதத்தை வழங்குங்கள்.
அல்லல்களில் இருந்தும் துன்பத்தில் இருந்தும் நம்மைக் காத்தருள்வார் வேங்கடவன். கடன் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து நம்மை மீட்டெடுப்பாள் மகாலக்ஷ்மிதேவி.
புரட்டாசி சனிக்கிழமையில், பெருமாளை ஆலயம் சென்று தரிசிக்கும் போது, அங்கே நம்மால் முடிந்தால், புளியோதரை நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்குவதும், அன்னதானம் செய்வதும் மும்மடங்குப் பலனதைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில், புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையில், ஆலயம் செல்லுங்கள். பெருமாளையும் தாயாரையும் ஸேவியுங்கள். கோவிந்தனிடம் குறைகளையெல்லாம் சொல்லி பிரார்த்தனை செய்யுங்கள். தடைப்பட்ட திருமணம் முதலான காரியங்களை நடத்தி அருளுவார்கள் பெருமாளும் தாயாரும்!
The post புரட்டாசி முதல் சனிக்கிழமையில் பெருமாள் தரிசனம்! appeared first on Dinakaran.