ஈரோட்டில் கோர்ட் உத்தரவுப்படி பழைய இடத்தில் மீண்டும் ஜவுளி கடைகள் அமைக்கும் பணி தொடக்கம்

 

ஈரோடு, செப்.23: கோர்ட் உத்தரவுப்படி பழைய இடத்திலேயே மீண்டும் ஜவுளி கடைகள் அமைக்கும் பணி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஈரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் மாநகராட்சிக்கு சொந்தமான அப்துல்கனி ஜவுளி மார்க்கெட் உள்ளது. இவ்வளாகத்தில் தினசரி கடைகள், வாரச்சந்தை கடைகள் என 900க்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் இருக்கின்றது. இந்நிலையில் இக்கடைகளை அகற்றிய மாநகராட்சி நிர்வாகம் வேறு இடத்தை ஒதுக்குவதாகவும் அல்லது புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தில் கடைகள் ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தது.

ஆனால் வணிக வளாக கடைகளுக்கு கூடுதல் தொகை நிர்ணயிக்கப்பட்டதால் வணிக வளாக கடைகளை டெண்டர் எடுக்க விரும்பவில்லை. பழைய இடத்தில் இருந்த கடைகளும் அகற்றப்பட்டு, புதிய வணிக வளாக கடைகளும் ஏலம் போகாதால் கடந்த ஒரு மாதகாலமாக கடைகள் நடத்தப்படாமல் உள்ளது. இது தொடர்பாக ஜவுளி வியாபாரிகள் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து பழைய இடத்திலேயே வருகிற டிசம்பர் மாதம் வரை கடைகள் நடத்தி கொள்ள கோர்ட் அனுமதி வழங்கியது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் கடைகளை அமைக்க உரிய அனுமதி வழங்காமல் இருந்து வந்ததால் கோர்ட் உத்தரவுப்படி கடைகள் அமைக்க முடியவில்லை.

இந்நிலையில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியிடம் ஜவுளி வியாபாரிகள் இப்பிரச்சனை தொடர்பாக முறையிட்டனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்படி ஏற்கனவே செயல்பட்டு வந்த இடத்திலேயே மீண்டும் கடைகள் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று, முதல் கடைகள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகின்ற செவ்வாய்க்கிழமை முதல் வழக்கம்போல ஜவுளி சந்தை நடைபெறும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ஈரோட்டில் கோர்ட் உத்தரவுப்படி பழைய இடத்தில் மீண்டும் ஜவுளி கடைகள் அமைக்கும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: