சென்னையில் கடந்த 2 வருடங்களில் 26,671 தெரு நாய்களுக்கு கருத்தடை: அதிகாரி தகவல்

சென்னை, செப்.23: சென்னையில் கடந்த 2 வருடங்களில் 26,671 தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை தெருநாய் கூட்டம் கும்பலாக சூழ்ந்து கொண்டு கடிக்கப் பாய்வதும், இதனால் உயிருக்கு பயந்து இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதும், பலர் தடுமாறி விழுந்து காயமடைவதும் தொடர்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் தனியாக சென்றால் அவ்வளவு தான், பேயை கண்டால் கூட அப்படி ஓடமாட்டார்கள். ஆனால், நாயை கண்டால் பயந்து ஓட்டமெடுக்கும் சம்பவம் இருசக்கர வாகனம் வைத்திருப்பவருக்கும், நடந்து செல்லும் நபர்களுக்கும் நிச்சயம் நடைபெற்று இருக்கும். இந்த தெருநாய்கள் குப்பை தொட்டிகள், சாலையோரங்களில் கூட்டமாக சுற்றி திரிவதுடன், அடிக்கடி சண்டையிட்டு சாலையில் குறுக்கே ஓடுவதால் விபத்தும் ஏற்படுகிறது.

ஒருமுறை நாய் கருத்தரித்தால் குறைந்தது 5க்கும் மேற்பட்ட குட்டிகளாவது ஈன்றெடுக்கும். இதை கட்டுப்படுத்த தவறினால் அது பல மடங்கு பெருகிவிடும். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு பெருகி வரும் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, சாலையும் திரியும் நாய்களை பிடிக்க சென்னை மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது தினமும் ஆய்வு மேற்கொண்டு எந்த பகுதியில் தெரு நாய்கள் சுற்றி திரிகிறதோ, அவைகளை பிடித்து வாகனங்கள் மூலம் திரு.வி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட பேசின் பாலம் மற்றும் கண்ணம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள இனக்கட்டுப்பாடு மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அங்கு, கால்நடை உதவி மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பின்னர், சிகிச்சைக்கு பிறகு அவற்றை மீண்டும் அதே பகுதியில் விடப்படுகிறது. இவ்வாறு மாநகராட்சியின் நடவடிக்கையால் தெருநாய்கள் தொல்லை ஓரளவு குறைந்துள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தெரு நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு மேற்கொள்வதற்கு முன்னதாக அதன் உடல்நிலை, உடல் வெப்பநிலை, எடை போன்றவற்றை பரிசோதனை செய்து, பிறகு இன கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்படுகின்றன. அவ்வாறு பரிசோதிக்கப்படும் போது உடல்நலக் குறைவு உள்ள நாய்கள் தனியாக கண்காணிக்கப்பட்டு முறையான சிகிச்சை வழங்கப்பட்ட பிறகு இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அங்கு கால்நடை மருத்துவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் தெரு நாய்களை பிடிப்பதற்காக 16 சிறப்பு வாகனங்களும், ஒவ்வொரு வாகனத்திலும் 5 பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர் ஒருவர் உள்ளனர். நாய்களை பிடிப்பதற்காக 64 வலைகள் உள்ளன. இதன்படி, சென்னையில் கடந்த 2 வருடங்களில் மொத்தம் 26,671 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை செய்யப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டில் மொத்தம் 15,695 நாய்களுக்கும், இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் இந்த செப்டம்பர் மாதம் வரை 10,976 நாய்களுக்கும் கருத்தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிகள் மழைக்காலத்திற்கு முன் தீவிரப்படுத்தப்படும்,’’ என்றார்.

The post சென்னையில் கடந்த 2 வருடங்களில் 26,671 தெரு நாய்களுக்கு கருத்தடை: அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: