ஓட்டல்களில் கெட்டுப்போன 11 கிலோ சிக்கன் பறிமுதல்

ஓசூர், செப்.23: ஓசூரில் உணவகங்கள், ஷவர்மா கடைகளில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறையினர், 11 கிலோ கெட்டுபோன சிக்கனை பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு உத்தரவின்பேரில், ஓசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ராஜசேகர், முத்துக்குமார் ஆகியோர், ஓசூர் மற்றும் சூளகிரி பகுதிகளில் இயங்கி வரும் அசைவ ஓட்டல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, ஓசூரில் இயங்கி வரும் அசைவ ஓட்டல்கள் மற்றும் ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன 11 கிலோ சிக்கன் இருந்ததை கண்டறிந்து, பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்.

மேலும், சில ஓட்டல்களில் மட்டன் சுக்கா, பெப்பர் சிக்கன், சிக்கன் கபாப், ஷவர்மா, மயோனஸ், மட்டன் பிரியாணி போன்ற உணவு பொருட்களின் மாதிரிகளை சேகரித்து, உணவு பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், சில பேக்கரி மற்றும் டீக்கடைகளில் 6 கிலோ கலப்பட டீத்தூளை பறிமுதல் செய்து அழித்தனர். கெட்டுப்போன சிக்கன் மற்றும் கலப்பட டீத்தூள் விற்றவர்களுக்கு, உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி, தலா ₹2000 வீதம் 3 கடைக்காரர்களுக்கு ₹6000 அபராதம் விதித்தார். உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் நடத்தி வரும் உணவு வணிகர்களுக்கு, ₹50 ஆயிரம் முதல் ₹2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

The post ஓட்டல்களில் கெட்டுப்போன 11 கிலோ சிக்கன் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: