எருமை முட்டியதில் 3 பேர் காயம்

ஊத்தங்கரை, செப்.23: ஊத்தங்கரை பஸ் நிலையம் பின்புறம், வெள்ளிக்கிழமை தோறும் மாட்டுச் சந்தை நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற சந்தையில், புரட்டாசி மாதம் என்பதால் ஆடு, கோழிகள் விற்பனை குறைவாக இருந்தது. இந்நிலையில், முசிலிகொட்டாய் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர், எருமை ஒன்றை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார். சந்தை நடந்த போது, திடீரென ஆவேசமடைந்த எருமை சந்தையில் இருந்தவர்களை முட்டி தள்ளி விட்டு, அரூர்-வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் ஓடி அங்கிருந்தவர்களையும் முட்டி தள்ளியது. இதில் அரூர் அடுத்த கணபதிபட்டியைச் சேர்ந்த செல்வமணி மற்றும் ஊத்தங்கரை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த டிரைவர் மணி மற்றும் ஒரு முதியவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் சந்தையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post எருமை முட்டியதில் 3 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: