அதன்படி, பெரும் எதிர்பார்ப்பு மிக்க இந்த திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரத்தில் நடந்த விழாவில், தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் 1.06 கோடி மகளிர் தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டனர். 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவதாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் இ-சேவை மையங்கள் மூலம் கடந்த 18ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம், விண்ணப்பதாரர்களின் செல்போனுக்கு கடந்த 18ம் தேதி முதல் குறுஞ்செய்தியாக வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலானவர்களுக்கு குறுஞ்செய்தி வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் விண்ணப்பதாரர்கள் பலர் பதற்றம் அடைந்தனர். தங்களுக்கு ரூ.1000 பணம் கிடைக்காமல் போய் விடுமோ என்று நினைத்தனர்.
இதையடுத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் குவியத் தொடங்கி உள்ளனர். அங்கு அமைக்கப்பட்டு உள்ள உதவி மையங்களில் விண்ணப்பத்தின் நிலை பற்றி விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதில் அவ்வப்போது சர்வர் பிரச்னை ஏற்படுவதால் அனைவரும் விண்ணப்ப நிலையை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள், இணைய சேவை மையங்களை அணுகி மேல்முறையீடு செய்ய வழி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் இணைய சேவை மையங்களின் வழியே மேல்முறையீடு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை விண்ணப்பதாரர்களே அறிந்து கொள்ள தனி இணைய தளம் https://kmut.tn.gov.in தொடங்கப்பட்டது. இந்த இணையதளத்தில் ஆதார் எண்ணையும், பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணையும் குறிப்பிட்டால் ஒரு முறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு செல்போனுக்கு வரும். இதைக் கொண்டு விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். இந்த இணையதளம் ஓரிரு நாட்களாக பயன்பாட்டில் இல்லாமல் முடங்கி உள்ளது. இணையதளம் பராமரிப்பில் இருப்பதாகவும், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வரப்பெற்றவர்கள், இணைய சேவை மையங்களை நாடினாலும் மேல்முறையீடு செய்ய முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து இணைய சேவை மையத்தினர் கூறுகையில், ‘‘மேல்முறையீட்டுக்கான வசதி இணைய சேவை மையங்களில் இதுவரை ஏற்படுத்தித் தரவில்லை. விண்ணப்பத்தின் நிலையை மட்டுமே இலவசமாக பார்த்து விண்ணப்பதாரர்களுக்கு கூறி வருகிறோம்’’ என்றனர். விண்ணப்பங்களின் நிலையை அறிய வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்களில் மகளிர் குவிந்திருக்க, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களோ மேல்முறையீடு செய்வது எங்கே என தெரியாமல் தவிக்கிறார்கள்.
எனவே இதற்கான உரிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு விரைந்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கிடையே விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விண்ணப்பப் படிவங்களை வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பெற்று, பூர்த்தி செய்த படிவங்களை சிறப்பு முகாம்களில் அளிக்க யோசனைகள் முன் வைக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்களே 57 லட்சம் பேர் உள்ளனர். மேலும் புதிதாக சேர விரும்புவோரும் கணிசமாக இருக்கின்றனர். இவ்வளவு பேரும் ஒரே நாளில் உதவி மையங்களை நாடியதால் உதவி மையங்களில் நேற்று கூட்டம் அலைமோதியது. ஒட்டுமொத்த சென்னையில் 15 மண்டலங்களில் மண்டலத்துக்கு ஒன்று என 15 உதவி மையங்களே ஏற்படுத்தப்பட்டுள்ளன. உதவி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், அல்லது டோக்கன் மூலம் எப்போது உதவி மையத்தை அணுக வேண்டும் என்று மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
பலருக்கு கிடைத்து தனக்கு கிடைக்கவில்லையே, கிடைக்குமோ, கிடைக்காதோ என்று மக்கள் தவிக்கின்றனர். எனவே மக்களிடம் தேவையான ஆவணங்களை சரியாக கேட்டுப் பெற வேண்டும். அவர்களுக்கு ஊழியர்கள் கனிவுடன் வழிகாட்ட வேண்டும். தகுதி உள்ளவர்களுக்கு உரிமைத் தொகை கட்டாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை விண்ணப்பதாரர்களே அறிந்து கொள்ள தனி இணைய தளம் https://kmut.tn.gov.in தொடங்கப்பட்டது.
The post மகளிர் உரிமை தொகைக்கு மேல்முறையீடு செய்ய அலைமோதும் கூட்டம் உதவி மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த மக்கள் கோரிக்கை: சிறப்பு முகாம்கள் நடத்த அரசு பரிசீலனை? appeared first on Dinakaran.
