மார்கழி மாதத்தில் வாசல்கோலத்தில் சாணப் பிள்ளையார் மீது பூசணிப்பூ வைப்பது ஏன்?

கோயில்களில் நவகிரகம், சண்டேஸ்வரர், பைரவர் ஆகியவர்களுக்குச் சந்நதிகள் இருக்கின்றன. இவர்களில் முதலில் யாரை வணங்க வேண்டும்?
– வடிவு, நாமக்கல்.

முதலில் சண்டேஸ்வரர், இரண்டாவது பைரவர், மூன்றாவது நவகிரகங்கள் என்று
வணங்குவது முறை.

கோயில்களில் நிவேதனம் செய்த பின்பு, அந்தப் பிரசாதத்தை எதிரில் உள்ள பலிபீடத்தில் வைத்துப் பிறகு காக்கைக்குப் போடுகிறார்களே ஏன்?
– வசுமரி ராம், வந்தவாசி.

பூஜையை வீட்டில் செய்தாலும் கோயிலில் செய்தாலும் பூஜையின் முடிவில் தாழ்ந்த உயிர்களுக்குச் சிறிதாவது உணவளிக்க வேண்டும். அதுதான் பலி. அதற்குத்தான் பலிபீடம்.

நீண்ட சிகைக்கும் ஆன்மிக பலத்திற்கும் சம்பந்தம் உண்டா? முனிவர்கள் பலர் ஜடாமுடி, தாடியோடு இருக்கக் காரணம் என்ன?
– தமிழரசி, கோலார்.

சிகை வைத்துக் கொள்வது என்பது நம் நாட்டின் கலாசாரம். சிகை வளர்த்துக் கொள்வதால் உடம்பில் ஏற்படும் உஷ்ணம் தணியும். கேசங்களை அழகாக வைத்துக் கொள்வதும், சவரம் செய்து கொள்வதும் சாஸ்திர விஷயமாக இருந்தாலும், அது ஒருவருக்கு அழகைக் கொடுக்கும். அத்தகைய சரீர அழகை புறக்கணிப்பதால் முனிவர்கள் நீண்ட தாடி ஜடா முடியுடன் இருக்கிறார்கள். எனினும் அதுவே அவர்களுக்கு ஓர் அழகாகி விடுகின்றது. யோகிகளின் சிரசில் கத்தியை உபயோகித்து கேசத்தை எடுக்கக் கூடாது என்பதும் விதி.

எங்கும் பரவியுள்ள பரம்பொருளை உருவ வடிவில் வணங்குவது ஏன்?
– அனுராதா, ஹோசூர்.

பரம்பொருள் என்பதை சற்றே எண்ணிப் பாருங்கள். எங்கும் நிறைந்தது, எந்த உருவமும் அற்றது. எந்த குணத்திற்கும் அப்பாற்பட்டது. எந்தக் கற்பனைக்கும் எட்டாதது. கடவுளை இப்படி நினைத்துப் பாருங்கள்! எதற்கும் பிடிபடாத, உட்படாத ஒரு வெறுமையை நினைப்பதுபோல இருக்கும். எனவே மனித மனம் மனித வரம்புக்குள், பரம்பொருளை உட்படுத்தி உருவமாகத் தொழுகிறது. அதனால், வடிவங்கள் தேவை. வடிவமுள்ளதில் வரும் பக்தி பின்னர் தானாகவே வடிவமற்ற இறைவனோடு ஐக்கியமாகிவிடும்.

மார்கழி மாதத்தில் வாசல்கோலத்தில் சாணப் பிள்ளையார் மீது பூசணிப்பூ வைப்பது ஏன்?
– குமரன், தில்லையாடி.

தீய சக்திகள் வீட்டினுள் வருவதைத் தடுக்கவும், திருஷ்டி தோஷங்கள் நீங்கவும் மார்கழி மாதம் முழுவதும் தினமும் வாசலில் கோலம் போட்டு சாணப்பிள்ளையார் மீது பூசணிப்பூ வைப்பது வழக்கம். தினமும் அந்த சாணப் பிள்ளையாரை சேர்த்து வைத்து மார்கழி கடைசியில் தீயிலிட்டு எரிப்பர்.

விவாகத்தின் தாத்பர்யம் என்ன?
– ஸ்மிதா, புதுவண்ணை.

விவாகம் மனிதனின் இரண்டாவது நிலையின் துவக்கமாக உள்ளது. இது தர்மத்தைக் கடைப் பிடிப்பதற்கும், அதன்மூலம் வாழ்க்கை நல்வழியில் செல்வதற்கும் உதவும் சடங்காகும். வேதங்களில் கூறியுள்ளபடி தர்மமான வாழ்க்கையை நடத்தி பொருள், இன்பங்களை தர்மத்திற்குட்பட்டு அனுபவிப்பதே இல்லற வாழ்க்கை. ஒரு முப்புரி பூணூலை அணிந்து கொண்டிருந்த பிரம்மச்சாரி, கிருஹஸ்தனாகும் போது, அவனுடைய வாழ்க்கைத் துணைவிக்காகவும் சேர்த்து இரண்டு முப்புரி பூணூலை அணிந்துகொள்கிறான். விவாகம் ஒருவனுக்கு வைதீகச் சடங்குகளைச் செய்யக்கூடிய தகுதியை அளிக்கின்றது. இச்சடங்கில் முக்கிய அம்சங்கள் கன்யா தானம், மாங்கல்ய தாரணம் பாணிக்ரஹணம், ஸப்தபதி, லாஜஹோமம், கிருஹப்பிரவேசம், துருவா அருந்ததி தரிசனம் போன்றவையாகும்.

இறைவன் ஆத்மாவில் இருக்கிறான் என்றால் கோயில்கள் எதற்கு? மானசீகமாக வணங்கினால் போதாதா?
– ரக்ஷிதா, நந்தனம்.

இறைவன் எல்லோருடைய உள்ளத்திலும் இருக்கிறான் என்று அனுபூதியில் கண்டவர்கள்தான், அதே இறைவனைக் கோயில்களில் வழிபடும் முறையையும் ஏற்படுத்தினார்கள். ‘இறைவன் எங்கும் உள்ளான்’ என்று உணராதவர்கள்தான் கோயில் வழிபாட்டைக் குறை கூறுகிறார்கள். மானசீகமாக இறைவனை வழிபடுகிறேன் என்று சொல்பவர்கள், மானசீகமாகவா சாப்பிடுகிறார்கள்? உள்ளே தியானம் செய்வதுடன் வெளிப்படையாகவும் வழிபடுவதுதான் நல்லது. உள்ளே இருக்கும் இறைவன் வெளியிலும் இருக்கிறார்.

தொகுப்பு: அருள்ஜோதி

The post மார்கழி மாதத்தில் வாசல்கோலத்தில் சாணப் பிள்ளையார் மீது பூசணிப்பூ வைப்பது ஏன்? appeared first on Dinakaran.

Related Stories: