இரு தரப்புக்கும் நடப்பது பொய் சண்டை பாஜவை எதிர்த்துப் பேச அதிமுகவுக்கு தைரியமில்லை: கே.எஸ்.அழகிரி பேட்டி

திண்டுக்கல்: பாஜவை எதிர்த்து பேச அதிமுகவுக்கு தைரியம் கிடையாது. இவர்களுக்கு இடையே நடைபெறுவது பொய் சண்டை என காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வாக்குச்சாவடி நிர்வாகிகள் பயிற்சி பாசறை கூட்டம் நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காங்கிரஸ் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக, பாஜ இடையே ஏற்பட்டுள்ள சண்டை ஒரு பொய் சண்டையாகும்.

பாஜகவை எதிர்த்து பேச அதிமுகவுக்கு தைரியம் கிடையாது. அதே நேரத்தில் பாஜ கூட்டணியை விட்டு அதிமுக வெளியே வராது. மோடி நாடாளுமன்றத்தையும், இந்தியாவையும் தனது ஆளுமையின் கீழ் கொண்டு வர முயற்சிக்கிறார். இட ஒதுக்கீடு என்பது தொகுதி வரையறையின் கீழ் நடைபெறும் என மோடி சொல்கிறார். இதன் மூலம் ஹிந்தி பேசுகின்ற மாநிலங்களில் எல்லாம் இன்னொரு மடங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெறுவார். ஆனால் தென் மாநிலங்களில் உள்ள 4 மாநிலங்கள் அவர்களுக்கு தேவையில்லை. இதனால் தமிழகத்தில் தொகுதி வரையறை செய்யும்போது, நாடாளுமன்ற தொகுதி குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த முறை கணக்கெடுப்பு என்பது தவறானது.

மோடி ஆட்சிக்கு வந்த பின்பு இதுவரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவில்லை. இந்தியாவில் எவ்வளவு மக்கள் தொகை உள்ளது என்பது முழுமையாக தெரியாமலே பாஜ அரசை நடத்தி வருகின்றனர். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இடஒதுக்கீடு எப்படி வழங்க முடியும்? இவ்வாறு அவர் பேசினார்.

காவிரி விவகாரத்தில் பாஜ அரசியல் செய்கிறது
கே.எஸ்.அழகிரி கூறுகையில், ‘காவிரி விவகாரத்தில் தமிழக அரசு நியாயத்தின் அடிப்படையில் தண்ணீர் கேட்கிறது. காவிரி ஆணையம் உச்ச நீதிமன்றம் நமக்கு எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதை முறையாக வரையறைப்படுத்தியுள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி வறட்சி காலத்தில் தர வேண்டிய 5000 கன அடி தண்ணீரை வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் காங். கட்சியும் தண்ணீர் தர வேண்டும் என்றுதான் கூறுகிறது. இதில் பாஜ தான் அரசியல் செய்கிறது. கர்நாடகாவில் இருக்கின்ற பாஜவினர் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என சொல்லும்போது, இங்கே தமிழகத்தில் இருக்கின்ற பாஜவினர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் இதை வைத்து அரசியல் செய்யவில்லை’ என்றார்.

The post இரு தரப்புக்கும் நடப்பது பொய் சண்டை பாஜவை எதிர்த்துப் பேச அதிமுகவுக்கு தைரியமில்லை: கே.எஸ்.அழகிரி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: