தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுரை

சென்னை: தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல வாரிய கட்டிடத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நேற்று பணித்திறனாய்வு கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் கூறியதாவது:
இந்தியாவில் அதிகமான தொழிலாளர்களை கொண்டுள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்களே இல்லை என்ற நிலையை அலுவலர்கள் உருவாக்க வேண்டும்.
தொழிலாளர் துறை அலுவலர்களின் பணிகளை திறனாய்வு மேற்கொண்டு, அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் நிலுவையில் உள்ள பதிவு புதுப்பித்தல் மற்றும் திருமண உதவித் தொகை, விபத்து, மரண உதவித் தொகை, ஓய்வூதியம் போன்ற கேட்பு மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் விரைந்து முடித்து தீர்வு கண்டு பதில் அளிக்க வேண்டும்.

தோட்ட தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி அதனை உறுதி செய்ய வேண்டும். பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்கள் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளதை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அறிவுரைகள் கூறியுள்ளார். இதில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் குமார் ஜெயந்த், முதன்மை செயலாளர் அதுல் ஆனந்தி உள்பட தலைமையிட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: