முன்னறிவிப்பின்றி சாலையோர கடைகள் அகற்றியதால் வியாபாரிகள் சங்கம் திடீர் ஆர்ப்பாட்டம்

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே முன்னறிவிப்பின்றி சாலையோர கடைகளை அகற்றிய, அதிமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து, வியாபாரிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பஜார் வீதி, பேருந்து நிறுத்தம், பக்கிங்காம் கால்வாயின் இருபுறம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நடைபாதை வியாபாரிகள் காய்கறி மற்றும் பழக்கடை, பூக்கடைகள் வைத்திருந்தனர்.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுவதாகவும், அவைகளை அகற்றவும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்ததின் பேரில் வருவாய்த்துறையும், புதுப்பட்டினம் ஊராட்சி நிர்வாகமும் இணைந்து கடந்த வாரம் அந்த நடைபாதை ஓரம் இருந்த கடைகளை அகற்றினர். அதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக மறுநாளே பழைய விட்டிலாபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இந்நிலையில் முன்னறிவிப்பின்றி தன்னிச்சையாக அதிமுகவை சேர்ந்த புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி தனபால், உள்நோக்கத்தோடு இந்த கடைகளை சேதப்படுத்தி அகற்றியதாகவும், கடையிழந்த வியாபாரிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரியும் நேற்று புதுப்பட்டினம் வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதுப்பட்டினம் வியாபாரிகள் சங்கத் தலைவர் காதர் உசேன் தலைமை தாங்கினார். இதில் புதுப்பட்டினம், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டு கோரிக்கைகளை முன் வைத்து கண்டன உரையாற்றினர். பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் கடைத்தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

The post முன்னறிவிப்பின்றி சாலையோர கடைகள் அகற்றியதால் வியாபாரிகள் சங்கம் திடீர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: