வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று மாநிலங்களுக்கான உரிமையை மீட்க முதலில் போராட்டக்குரலை எழுப்பியவர் பேரறிஞர் அண்ணா. அவர் வழியில் தமிழ்நாட்டை வழிநடத்தி சென்ற கலைஞரும் மாநில உரிமைக்கு ஆபத்தென்றால் முதல் நபராக அதை எதிர்த்து ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பார். அதேபோன்று தற்போது நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில உரிமைகளை எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் விட்டுத்தராமல் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார்.
மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒன்றிய பாஜ அரசு திட்டமிட்டுள்ளது. இதை பாஜவின் சூழ்ச்சி என்றும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவின் அரசியல் பிரதிநிதித்துவத்தின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக இதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடந்தால் தமிழ்நாட்டில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 39லிருந்து 49ஆக உயரும். இதுபோல கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் பெரிய அளவில் எண்ணிக்கை உயராது. ஆனால் வடமாநிலங்களில் எம்பிக்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். நாடாளுமன்றத்தில் 800 எம்பிக்களுக்கு மேல் இடம்பெறுவார்கள். இதில் 80 சதவீத எம்பிக்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். தென்னிந்தியாவை சேர்ந்த எம்பிக்கள் 19 சதவீதமாக குறைந்து நாடாளுமன்றத்தில் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும். இதை மனதில் வைத்து தான் ஒன்றிய பாஜ அரசு மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை என்று அறிவித்துள்ளது.
தென்மாநிலங்கள் தங்கள் உரிமைக்காக மீண்டும் போராட வேண்டிய சூழ்நிலையை நோக்கி ஒன்றிய அரசு அழைத்து செல்கிறது. தென்மாநிலங்களின் அரசியல் பிரிநிதித்துவம் ஒன்றியத்தில் குறைக்கப்பட்டுவிட்டால் தாங்கள் நினைத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் எளிதில் நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று பாஜ அரசு நினைக்கிறது. இது இப்படி இருக்க, மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஒன்றிய அரசு மக்களவையில் நிறைவேற்றியுள்ளது. இது வரவேற்புக்குரியது என்றாலும் 2029ம் ஆண்டு முதல் இச்சட்டம் அமலுக்கு வரும் என்பதில் தான் சூழ்ச்சி அடங்கியுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டுவிட்டால் நாடாளுமன்றத்தில் அப்போதும் மகளிரின் பிரதிநிதித்துவம் தற்ேபாதைய நிலையே தொடரும் என்பதை உணர வேண்டும்.
தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தபிறகு உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீதம் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கினார். மகளிருக்கு மாதம் ₹1000 உரிமை தொகை, மாநகர பேருந்துகளில் இலவச பயணம், பெண் காவலர்கள் நியமனம், அரசு பணிகளில் 40 சதவீத இடஒதுக்கீடு, மகளிர் சுயஉதவிக்குழு, ஒடுக்கப்பட்ட சமூக பெண்களுக்கான சலுகைகள் என்று சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் சுயலாபத்துக்காக மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றிவிட்டு ஒன்றிய பாஜ அரசு பெரிய சாதனை படைத்துவிட்டது போன்று விளம்பரம் தேடிக்கொள்வதை பாமரர்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். பாஜவின் சூழ்ச்சி வலையில் தமிழ்நாட்டு மக்கள் விழவேமாட்டார்கள் என்பதை அவர்கள் நன்கு உணர வேண்டும்.
The post பாஜவின் சூழ்ச்சி appeared first on Dinakaran.