திருப்பதி கோயில் பிரம்மோற்சவ 4ம் நாள்: கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்பசுவாமி வீதியுலா

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 4ம் நாளான இன்று காலை கற்பக விருட்ச வாகனத்தில் தேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்பசுவாமி மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவில் மாடவீதியில் மலையப்ப சுவாமி பவனி வருகிறார். அதன்படி நேற்றிரவு தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி முத்துபந்தல் வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரம்மோற்சவத்தின் 4ம் நாளான இன்று காலை தேவி பூதேவி தாயார்களுடன் மலையப்பசுவாமி ராஜமன்னார் அலங்காரத்தில் கற்பக விருட்ச வாகனத்தில் மாடவீதியில் பவனி வந்தார். கேட்கும் வரங்களை தருவது கற்பக விருட்சம். அதுபோன்று கலியுகத்தில், தன் பக்தர்கள் கேட்கும் வரங்களை தரக்கூடிய வகையில் மலையப்ப சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் பவனி வந்தார். மாட வீதியில் திரண்டிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்றிரவு மன்னர்களுக்கு எல்லாம் மன்னர் நானே என்பதை உணர்த்தும் விதமாக ஏழுமலையான் கோயில் கோபுர வடிவிலான தங்க ‘சர்வ பூபால வாகனத்தில்’ தாயார்களுடன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். சர்வ பூபால வாகனத்தில் சுவாமியை தரிசனம் செய்தால் வாழ்க்கையில் அகங்காரம் ஒழிந்து நற்பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான நாளை காலை நாச்சியார் திருக்கோலத்திலும், பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட சேவை நாளை இரவு 7 மணிக்கும் நடைபெறவுள்ளது. கருட சேவையை காண இன்று காலை முதலே பக்தர்கள் திருப்பதிக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

The post திருப்பதி கோயில் பிரம்மோற்சவ 4ம் நாள்: கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்பசுவாமி வீதியுலா appeared first on Dinakaran.

Related Stories: