ஜாதக ரீதியாக திருமணப் பொருத்தம் பார்ப்பது என்பது மிகமிக நுட்பமான சிக்கலான விஷயம். முதலில் எல்லா ஜோதிடர்களும் இதை மிக எளிதாகப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. அதனால்தான், நீங்கள் ஒரு திருமணம் நடந்து, சிக்கலாகி, முறிவு (Divorce) நடந்த பிறகு, சில ஜோதிடர்களிடம் காட்டினால் அவர்கள், “இந்த இரண்டு ஜாதகம் ஏன் சேர்த்தீர்கள்? யார் உங்களுக்கு சேர்த்தது?’’ என்று ஒரு கேள்வியைக் கேட்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். காரணம், இந்த சூட்சுமங்கள் எல்லாம் திருமணங்கள் முடிந்த பிறகு, அந்த ஜாதகத்தைக் காட்டும் பொழுதுதான் தெரியும். இன்னும் நுட்பமாகச் சொன்னால், திருமணத்திற்கு தசவிதப் பொருத்தம் பார்க்கிறார்கள்.
அது ஒரு மேலோட்டமான முதல்நிலை பொருத்தம்தான் என்பதை இன்றைக்கு எல்லா ஜோதிடர்களும் சொல்லுகின்றார்கள். ஆனால், அதை மட்டுமே பார்த்து முடிவு செய்து வாழ்ந்த ஏராளமான குடும்பங்கள் இருக்கின்றன. காரணம், இன்றைக்கு நூற்றுக்கணக்கான ஜோதிடர்களிலே விரல்விட்டு எண்ணக்கூடிய ஜோதிடர்களால் மட்டுமே இந்த எதிர்காலத்தை நுட்பமாகவும் திறம்படவும் கணிக்க முடியும். மற்றவர்களுக்கு நிச்சயமாக அந்த முழுமையான பயிற்சி இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆகையால் மற்றவர்கள் பெரும்பாலும் தசவிதப் பொருத்தத்தைப் பார்த்தே முடிவு எடுக்கிறார்கள் அல்லது நல்ல பொருத்தமான ஜாதகங்களை பரிசீலிக்கும் திறன் இன்றி நிராகரிக்கிறார்கள்.
நல்ல ஜாதகப் பொருத்தம் உடைய சில ஜாதகங்களை வெறுமனே தசவித பொருத்தம் பார்த்து நிராகரிக்கப்பட்டு, அந்த திருமணங்கள் நின்ற கதை எல்லாம் உண்டு. ஆனாலும்கூட, ஒருவர் நிராகரித்த பிறகு, மறுபடியும் அந்த ஜாதகத்தை தைரியமாக ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் இல்லை. காரணம், உளவியல்தான். வேறு ஏதோ ஒரு காரணத்தினால், ஏதேனும் ஒரு நிகழ்ச்சி நடந்துவிட்டால், அது இந்த காரணத்தினால் (ஜாதகத்தால்) தான் நடந்தது என்பதை எளிதாக சொல்லி விடுகிறார்கள். உதாரணமாக, ஒருவர் கேட்டை நட்சத்திரப் பெண் ஜாதகத்தைப் பார்க்கிறார். அந்த ஜாதகம் மிக நன்றாக இருக்கிறது. ஜாதகப் பொருத்தம் இருக்கிறது.
நட்சத்திரப் பொருத்தமும் இருக்கிறது. ஆனால், பெண் கேட்டை நட்சத்திரம், மூத்தாருக்கு ஆகாது என்ற ஒரு கற்பனை விஷயம் இருப்பதால், வேண்டாம் என்று ஜோதிடர் சொல்லிவிட்டார். ஆனால், எப்படியோ அந்த திருமணம் நடந்துவிட்டது. அந்தப் பையனுடைய மூத்தவர் கொஞ்ச காலம் கழித்து காலமாகிவிட்டார் உடனே ஏற்கனவே அந்த ஜாதகத்தை நிராகரித்த ஜோதிடர் “நான்தான் படித்து படித்துச் சொன்னேன். கேட்டை ஆகாது என்று. கோட்டை விட்டுவிட்டீர்களே’’ என்றார்.
இப்பொழுது இறந்துபோனவருடைய ஜாதகத்தை எடுத்துப் பார்த்தால், அவருடைய ஆயுள் பாவம் முடிவதும், கர்ம திசை வருவதும் எளிதாக கண்டுபிடித்துவிடலாம். கேட்டை நட்சத்திர தம்பி மனைவி வராவிட்டாலும் அவர் போயிருப்பார். காரணம், அது அவருடைய சொந்த பிறப்பு ஜாதக பலன். 6,8,12 பாதகாதிபதி திசையாக இருக்கும். அதற்கான வயது அவருக்கு இருக்கலாம். ஆனால், இது “கேட்டை செய்த சேட்டை” என்றுதான் எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அதற்கு பிறகு அந்த தம்பதிகள் மிக நன்றாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சில குடும்பங்களில் காரணமில்லாமல் இந்தப் பெண் வந்துதான் இப்படியாகிவிட்டது என்று வெறுக்க ஆரம்பித்து, பெண்ணின் நிம்மதியைக் கெடுத்து விடுவார்கள். இதெல்லாம் நடைமுறை. இப்படித்தான் ஆயில்யம், மூலம் போன்ற நட்சத்திரங்களைப் பற்றிய சில அபிப்ராயங்கள். எனக்குத் தெரிந்து பல மூலநட்சத்திரப் பெண்களின் மாமியார்கள், தீர்க்க ஆயுளோடு இருந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் மருமகளோடு நன்றாக இணைந்து வாழ்ந்து இருக்கிறார்கள்.
நான் அடிக்கடி இந்த விஷயத்தில் வலியுறுத்திச் சொல்வது இதுதான். ஒருவருடைய பிறப்பு ஜாதகம் என்பது இந்த வாழ்நாளில் அவர் பெறுகின்ற நன்மை தீமைகளை எல்லாம் நிர்ணயித்துக் கொடுக்கப்பட்டது. எந்த ஜாதகத்திலும் ஒருவருக்கு முழுமையான நன்மையோ, முழுமையான தீமையோ நடப்பதற்கு வழி இல்லை. 1,5,9 போன்ற திரிகோண ஸ்தானங்களைப்போலவே 6,8,12 என்கின்ற துர்ஸ்தானங்களும் எல்லா ஜாதகத்திலும் உண்டு. காரணம், இது கர்மபூமி. ஒருவன் முழுமையாக புண்ணியம் செய்து அந்த புண்ணிய பயனை அனுபவிக்கும் படியான பிறப்பைப் பெற முடியாது. அதே போலவே, ஒருவன் வாழ்நாள் முழுக்க துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறான் என்றும் சொல்ல முடியாது.
துன்பப்படுபவருக்கு, சந்தோஷமாக இருப்பதாகக் கருதும் மனிதர்களிடம் இல்லாத சில விஷயங்கள் உண்டு. அவர்கள் அதை பயன்படுத்துவதில்லை என்பது வேறு விஷயம். இந்த உலகத்தில் ஸ்ரீராமர், கிருஷ்ணர் போன்ற கடவுள் அவதாரங்களாக இருந்தாலும், ராமானுஜர், ஆதிசங்கரர், ராகவேந்திரர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர் வள்ளலார் போன்ற மகான்களாக இருந்தாலும் வாழ்வில் ஏதோ ஒரு விதத்தில் கஷ்டப்பட்டுத்தான் இருந்திருக்கிறார்கள் என்பது அவர்களுடைய வாழ்க்கைச் சரித்திரத்தை பார்க்கும் போது நமக்குத் தெரியும். அதற்காகத்தான் அந்தச் சரிதங்களையெல்லாம் நாம் படிக்கிறோம்.
ஆனால், நமக்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடு என்றால், அவர்களுடைய ஆன்மிக அறிவு துன்பத்தின் காரணங்களை உணர்ந்து ஏற்றுக் கொள்ளுகின்ற மனப்பக்குவத்தைத் தந்துவிட்டதால், அந்த துன்பங்கள் அவர்களை பெரிய அளவில் பாதிக்கவில்லை. அவர்கள் தாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள். ஒருவன் வேலை செய்கின்ற பொழுது கொசு, ஈ வந்து உட்கார்ந்தால், அதை இடது கையால் விரட்டிவிட்டு, வேலையை தொடர்ந்து பார்ப்பது போல, உலகியல் துன்பங்கள் எத்தனை வந்தாலும்கூட, அவர்கள் இடது கையால் விரட்டிவிட்டு, தாங்கள் வந்த காரியத்தையே குறியாகச் செய்து கொண்டிருந்தார்கள்.
இதைப் புரிந்து கொண்டால், நாம் நம்முடைய ஆழ்மனம் சொல்லுகின்ற வழிகாட்டுதலின்படி, நம்முடைய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். ஜோதிட சாஸ்திரத்தில் இன்னும் சில நுட்பங்கள் உண்டு. பொதுவாக, திருமணப் பொருத்தம் பார்க்கின்ற பொழுது, ஏழாம் இடத்தை களத்திர ஸ்தானம் என்கின்றார்கள். அது ஆணாக இருந்தால், மனைவியைக் குறிப்பது. பெண்ணாக இருந்தால், கணவனைக் குறிப்பது என்று நிர்ணயித்து, அந்த ஸ்தானத்தின் அமைப்பை முதலில் பார்க்கிறார்கள்.
இதை இரண்டு விதத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏழாம் இடம் என்பது லக்கினத்திற்குச் சமமான ஒரு இடம். அது நட்புக் குரிய இடம். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் சமமான அந்தஸ்து உடையவர்களாக இருக்க வேண்டும். இது இரண்டும் வண்டிகளின் இரண்டு சக்கரம் போல.
அதில் ஒரு சக்கரம் பெரியதாகவும் ஒரு சக்கரம் சிறிதாகவும் இருந்தாலும் வண்டி ஓடாது. அந்த சக்கரத்தின் அளவைத்தான், ஜாதகத்தில் அறிந்து கொள்ள வேண்டும். திறன் உள்ள ஜோதிடர்களால் மட்டுமே அந்தச் சக்கரம் பெரிதாக இருக்கிறதா, சின்னதாக இருக்கிறதா, ஆண்ஜாதகத்திற்கு ஏற்ற சக்கரமா, பெண் ஜாதகத்திற்கு ஏற்ற சக்கரமா என்பதை தெரிந்து சொல்லமுடியும்.
தொகுப்பு: தேஜஸ்வி
The post வண்டி ஓட சக்கரங்கள் போல கணவனும் மனைவியும் appeared first on Dinakaran.