அறிந்த பிள்ளையார்பட்டி அறியாத செய்திகள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கும் காரைக்குடிக்கும் இடையே அமைந்துள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயில், உலகில் உள்ள ஆன்மிக அன்பர்கள் அனைவரும் அறிந்த கோயில் ஆகும். கி.பி.4-ஆம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்ட இக்குட வரைக்கோயில், நகரத்தாரின் ஒன்பது கோயில்களுள் ஒன்றாகும். இக்கோயிலில், ஆறடி உயரத்தில் பத்மாசன நிலையில் அமர்ந்திருக்கும் கற்பக விநாயகர், வலதுகையில் சிவலிங்கத்தினை வைத்து யோக நிலையில் உலக நன்மைக்காக ஞானத்தவம் புரிந்து கொண்டிருப்பதாக ஐதீகம்.

பல்லவர் காலத்திற்கும் முற்பட்ட குடவரைக் கோயிலெனத் தொல் பொருள் ஆய்வு ரீதியாக நிரூபணம் செய்யப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க குடவரைக் கோயிலாக பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் விளங்குகிறது.கி.பி.7-ஆம் நூற்றாண்டில் வாதாபியிலிருந்து விநாயகர் சிற்பத்தைச் சிறுத்தொண்டர் கொண்டு வந்த பிறகுதான் விநாயகர் வழிபாடு தமிழகத்தில் ஏற்பட்டது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், அது உண்மையில்லை. பிள்ளையார்பட்டி விநாயகர் வழிபாடு, பல்லவர் காலத்துக்கும் முற்பட்டது. அதாவது, கி.பி.5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

நாட்டுக் கோட்டை நகரத்தாரின் நவகோயில்களில் ஒன்றாகத் திகழும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயில், நகரத்தாரின் திட்டமிட்ட அழகான கட்டடக் கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது.கி.பி.4-ஆம் நூற்றாண்டில், கற்பக விநாயகரின் சிற்பத்தை வடிவமைத்த சிற்பி, அதன் அருகிலேயே அவரது கையெழுத்தையும் கல்வெட்டில் செதுக்கியுள்ளார். அச்சிற்பியின் பெயர் ‘‘எக்காட்டூர் கோன் பெரு பரணன்’’ என்பதாகும். அவரது கையெழுத்து கி.பி.2-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.5-ஆம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்த ‘‘தமிழி’’ வரி வடிவத்தில் உள்ளது.

பிள்ளையார்பட்டி குட வரைக் கோயிலில், 11-கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகள் வழியே அன்றைய அரசாட்சி மற்றும் கோயில் பற்றிய செய்திகளை அறிய முடிகிறது. ஆதியில் இத்தல விநாயகருக்கு, ‘தேசி விநாயகப் பிள்ளையார்’ என்று பெயர்.தேசி விநாயகப் பிள்ளையார் என்றால் ஒளி, அழகு உள்ள ஒப்பற்ற தலைவனான மூத்த திருப்பிள்ளையார் என்பது பொருளாகும். அன்றியும் தேசி, தேசிகன் என்பது வணிக குலம் பணியும் விநாயகர் என்றும், வணிகர்களையும் உணர்த்துவதாகும். எனவேதான், இப்பிள்ளையார் நாட்டுக் கோட்டை நகரத்தாரின் குலதெய்வமாகவும் விளங்குகிறார். இவருக்கு கற்பக விநாயகர், வரதகணபதி, கற்பகக்களிறு, கணேசன், மருதங்கூர் அரசு என்று பல திருநாமங்களும் உண்டு.

இத்திருக்கோயிலின் அலங்கார மண்டபத்தில், உட்பக்கச்சுவரில் மூலிகைகள் கொண்டு வரையப்பட்ட வலம்புரி விநாயகரின் பெரிய வண்ண ஓவியம் இன்றளவும் பளிச்சென்று பார்ப்போரை பரவசதப்படுத்தும் வண்ணம் உள்ளது. இந்த ஓவியத்தை எத்திசையில் நின்று பார்த்தாலும், நம்மை விநாயகர் பார்ப்பது போன்றே அமைந்திருப்பது இதன் சிறப்பாகும். இச்சிறப்பு மிகு ஓவியத்தை, பிள்ளையார்பட்டிக்கு வருவோர், அவசியம் காண வேண்டிய ஒன்றாகும்.

உலகில் இரண்டு கரங்களுடன் காணப்படும் விநாயகரின் சிற்பங்கள் இரண்டு மட்டுமே உள்ளன. ஒன்று பிள்ளையார்பட்டியிலும், மற்றொன்று ஆப்கானிஸ்தானிலும் காணப்படுகிறது. திருமணப் பேறு நல்கும் காத்யாயினி அம்மனின் சிற்பம், இங்கு இருப்பது தனிச் சிறப்பாகும். இங்குள்ள நடராஜப் பெருமானின் செப்பு திருமேனியில் ஒரு அதிசயம் உள்ளது. அந்த சிற்பத்தில் உள்ள செம்பினால் ஆன டமாரத்தைத் தட்டினால், உண்மையான டமாரத்தின் ஒலியே கேட்கிறது.

இங்குள்ள ஆலய சிற்பங்களுள் ஒன்று காராம் பசு லிங்கத்தின் மேல் தானாகவே பால் பொழிந்து அபிஷேகம் செய்து வழிபடும் கற்சிற்பம். இது போன்ற சிற்பத்தை வேறு எங்கும் காண முடியாது. இதை குபேரன் வழிபட்டதாக ஒரு ஐதீகம். எனவே, பசுபதி லிங்கத்தை, வளமை பெருக வணங்குகிறார்கள்.வேறு எந்த தலத்திலும் இல்லாத இன்னுமொரு சிறப்பும் இங்கு உண்டு. திருவீசர், மருதீசர் என்னும் திருப்பெயர்களில் இரண்டு சிவலிங்கங்களும், சிவகாமியம்மை, வாடாமலர் மங்கை என்னும் திருப்பெயர்களில் இரண்டு அம்மன்களும் இங்கு உள்ளனர். தமிழகத்தில் வேறு எந்த கோயிலிலும் இல்லாத வகையில் இங்கு கற்பக விநாயகர் முன்பாக 16-திரிகளைக் கொண்ட ஷோடச விளக்கு எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும். யாதெனில், 16-வகையான பேறுகளை உணர்த்துவதாகும்.

இங்கு நகரத்தார் கோயில்கள் 9-தையும், நவக்கிரகங்கள் 9-தையும் குறிக்கும் வகையில், கற்பக விநாயகரைச் சுற்றி 9-விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இதே போன்று இருபத்தி ஏழு நட்சத்திரங்களை குறிக்கும் வண்ணம் கற்பக விநாயகர் முன்பாக நிலை வடிவில் 27-விளக்குகள் ஏற்றப்படுகின்றன.கற்பக விநாயகரின் சிறப்புகள் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இங்கு விநாயகரின் துதிக்கை வலம் சுழித்ததாக உள்ளது. இரண்டு கரங்கள் கொண்டுள்ளது. அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குவது.

வயிறு ஆசனத்தில் படியாமல் ‘‘அர்த்த பத்த’’ ஆசனம் போன்று கால்கள் மடித்திருக்க அமர்ந்திருப்பது. இடக்கரத்தை கடிஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதக்கோலம் தோன்றப் பொலிவது. வயிற்றில் மூன்று பட்டை உள்ளது. வலது கையில் லிங்கம் தாங்கியிருப்பது. தலையில் சடை உள்ளது. ஆண் பெண் இணைப்பை அறிவுறுத்தும் வகையில் வலது தந்தம் நீண்டும். இடது தந்தம் குறுகியும் காணப்படுவது. யோக நிலையில் உள்ளார். இவருக்கு எப்போதும் வெள்ளை ஆடை மட்டும் உடுத்துவது மரபாகும்.

பிள்ளையார்பட்டியில் நடைபெறும் விழாக்களில், ஆவணி மாதம் நடைபெறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இங்கு இவ்விழா பத்து நாட்கள் சீரும் சிறப்புமாக வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.பிள்ளையார் சதுர்த்திக்கு ஒன்பது நாள் முன்னதாகவே காப்பு கட்டி, கொடியேற்றம் செய்து இரண்டாம் திருநாள் முதல் எட்டாம் திருநாள் வரை, ஒவ்வொரு நாளும் காலை, விழாவில் வெள்ளிக் கேடகத்தில் சுவாமி திருவீதி உலாவும், இரவு வேளையில் ஒவ்வொரு நாளும் அட்டவணையில் குறிப்பிட்டபடி சிறப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகர் திருவீதி உலாவும் நடைபெறும். ஆறாம் நாள் மாலை கற்பக விநாயகர் கஜமுகாசூரனை சம்ஹாரம் செய்யும் ‘கஜமுகாசூர சம்ஹாரம்’ நடைபெறும். ஒன்பதாம் நாள் காலை கற்பக விநாயகர் பெருமான் திருத்தேருக்கு எழுந்தருளி மாலை திருத்தேர் திருவீதியுலா நடைபெறும்.

ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக முன்தினம், காலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் கற்பக விநாயகர் அற்புதமாக சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார். பத்தாம் நாள் சதுர்த்தி அன்று காலை தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இவ்விழாவில் முக்குறுணி எனப்படும் பதினெட்டுப் படி அரிசியில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை விநாயகப் பெருமானுக்குப் படைக்கப்படும்.

திருப்பதி லட்டுக்கு பிரசித்தம் பெற்றது போல், பிள்ளையார்பட்டி மோதகத்திற்கு பிரசித்திப் பெற்றதாகும். பத்தாம் நாள் இரவு ஐம்பெரும் பஞ்சமூர்த்திகளின் தேர்த்திருவிழா நடைபெறும். இங்குள்ள சண்டிகேஸ்வரர் திருத்தேரை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுப்பது தனிச்சிறப்பானதாகும். ஒவ்வொரு சதுர்த்தியன்றும் இரவு விநாயகப் பெருமான், வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி, கோயில் உட்பிராகாரத்தில் வலம் வருவார்.

தொகுப்பு: டி.எம்.ரத்தினவேல்

The post அறிந்த பிள்ளையார்பட்டி அறியாத செய்திகள் appeared first on Dinakaran.

Related Stories: