ஆன்மிகம் பிட்ஸ்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் ரெமுணா. இங்குள்ள கிருஷ்ணரின் பெயர் ‘க்ஷீரசோரா கோபிநாதன்’. க்ஷீரா சோரா என்றால் பாலைத் திருடியவர் என்று பொருள். இதனால், இந்த கிருஷ்ணரை கள்ளகிருஷ்ணர் என்கிறார்கள். இந்த கோபிநாதருக்கு ‘திரட்டுப்பால்’ என்ற இனிப்பே பிரசாதமாக படைத்து வழங்குகின்றனர். இங்கு கோபிநாதர், மோகன், கோவிந்தர் ஆகிய மூன்று கிருஷ்ணர்களுக்கும், மார்பில் தினமும் சந்தனம் பூசுகின்றனர்.

தஞ்சாவூரிலிருந்து கொஞ்சம் தொலைவில் உள்ள வரகூர் லட்சுமி நாராயணர் கோயிலில், கிருஷ்ணஜெயந்தி அன்று கிருஷ்ணர், பல்லக்கியில் பவனி வருவார். அப்போது, அவ்வூர் பக்தர்கள் கிண்ணம் கிண்ணமாக வெண்ணெயும், தயிரும் கொண்டு வந்து, கிருஷ்ணரின் கரத்தில் உள்ள வெள்ளிக்குடத்தில் நிரப்புவார்கள். இவ்வாறு செய்தால், அவர்கள் வீடுகளில் செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம். பகலில், வெண்ணெய் தாழியை கையில் வைத்திருக்கும் கிருஷ்ணர், இரவில், உறியடி கிருஷ்ணர் வேடத்தில் வலம் வருவார். முப்பத்திரண்டு பக்தர்கள் தீவெட்டிகளை ஏற்றி பிடித்திருக்க, அதன் ஒளியில் உறியடி திருவிழா அதிகாலை வரை நடக்கிறது.

ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோயில். இங்கு கிருஷ்ணர், ஏழு வயது பாலகனாகக் காட்சியளிக்கிறார். இந்தக் கோயில் பிரசாதம் எல்லாமே நெய்யில் செய்யப்பட்ட இனிப்புப் பிரசாதமே. தினந்தோறும்எட்டுவித தரிசனம், எட்டுவித நைவேத்தியம் நடக்கிறது. தீபாவளி சமயம் இந்த கிருஷ்ணருக்கு 56 வித இனிப்புப் பலகாரங்கள் செய்து நைவேத்தியம் செய்யப்படுகிறது. இங்கே அதிகாலை ஐந்து மணிக்கு, `மங்களா காலை’. ஏழுரை மணிக்கு, `சிருங்காரா’. எட்டரை மணிக்கு, `இடையர் போன்று க்வால்’. பத்தரை மணிக்கு, `ராஜ்போக்’. பிற்பகல் நான்கரை மணிக்கு, `உத்தாபன்’. மாலை ஐந்து மணிக்கு, `போக்’. ஆறு மணிக்கு, `ஆரத்தி’. ஏழு மணிக்கு, `சோபனம் சயனம் செய்தல்’ என்று எல்லா காலங்களிலும் வழிபாடு உண்டு.

தஞ்சைக்கு அருகிலிருக்கும் ராஜமன்னார்குடி திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளார் அருள்மிகு கோபாலகிருஷ்ணன். இந்தக் கோயிலில், சந்தான கிருஷ்ணர், ஐந்து தலை ஆதிசேஷனில் குழந்தை வடிவில் அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள், அந்தச் சிறிய விக்கிரகத்தை கைகளில் ஏந்தி சேவை சாதித்தால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

ராமநாதபுரத்திலிருக்கும் திருப்புல்லாணி திருத்தலத்தில் உள்ள ஸ்ரீகல்யாண ஜகந்நாதர் கோயிலில், வெளி மண்டபத்தில் சந்தானகோபாலன் எட்டு யானைகளுடனும், எட்டு நாகங்களுடனும் ஆதிசேஷன் குடைபிடிக்க நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

குஜராத்பேட் துவாரகையில் உள்ள கிருஷ்ணன் கோயிலில், குருக்கள் காலில் தண்டை அணிந்து சேலை கட்டி ஸ்ரீகிருஷ்ணனுக்குப் பூஜை செய்வது வழக்கமாக இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளவர்தாநகருக்கு அருகில், சிலையும் கூரையும் இல்லாமல் ஒரு கோயில் உள்ளது. இதை ‘கீதைக் கோயில்’ என்று அழைக்கிறார்கள். இத்தலத்தில், எழுநூறு பளிங்குக் கற்களில் பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களில் உள்ள ஸ்லோகங்களை, மராத்திய மொழியில் பொறித்து வைத்து அவற்றைத் தொட்டு வணங்கி வாசித்து தரிசனம் செய்கிறார்கள்.

நாகர்கோவில் பகுதியில், வடசேரி என்ற ஊருக்கு அருகில் கிருஷ்ணன் கோயில் உள்ளது. இங்கே குழந்தை வடிவில் ஸ்ரீகிருஷ்ணர் கோயில் கொண்டுள்ளார். இரவு நேரத்தில், அர்த்த ஜாம பூஜை முடிந்ததும் ஒரு தொட்டிலில் பட்டுத் துணியை விரித்து உற்சவ விக்ரஹத்தைப்படுக்க வைத்து, நாதஸ்வர இசையில் தாலாட்டுப் பாடி, பால் நிவேதனம் செய்து பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகம் செய்கின்றனர்.

யமுனை நதிக்கரையில் நந்தகாம் என்ற இடத்தில், கண்ணனுக்கு ஒரு சிறிய கோயில் உள்ளது. இங்கு கண்ணனின் பெயர் பிரமாண்ட விஹாரி. மண்ணை உண்ட வாயைத் திறந்து, தன் அன்னைக்கு அண்ட சாளரத்தையும் காட்டிய இடம் இதுதானாம். அதனால், இன்றும் இங்கு மண்ணெயே பிரசாதமாகத் தருகிறார்கள். இதற்கென பிரத்தியேக மண் வரவழைக்கப்பட்டு, பகவானுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது. இந்த மண்ணை வாயில் போட்டால் கரைகிறது.

மதுராவில் தேவகி – வசுதேவருக்கு எட்டாவது மகனாக அவதரித்தார் கிருஷ்ணர். அவர் பிறந்த இடம் ஒரு சிறிய சிறைச்சாலை. தற்போது அந்த இடத்திற்கு மேல் ‘கத்ரகேஷப்தேவ்’ என்ற கிருஷ்ணர் கோயில் எழுப்பப்பட்டுள்ளது.

குருக்ஷேத்திராவில் பீமசயனன்

துவைத மார்கத்தின் படி, வாயு பகவானுக்கு மூன்று அவதாரங்கள். 1) அனுமா, 2) பீமா, 3) மத்வா. திரேதா யுகத்தில், ராமபிரானுக்கு சேவைசெய்வதற்காக அனுமனாக அவதாரமும், துவாபர யுகத்தில் கிருஷ்ணருக்காக பீமனாகவும், கலியுகத்தில் வேதவியாசரின் சிஷ்யராக மத்வாச்சாரியாரும் அவதரித்தனர்.

இதை நினைவு கூறும் விதத்தில், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரில் “படே அனுமான் மந்திர்’’ என்னும் கோயிலை நிறுவி, அனுமாருக்கு மிக பெரிய உயரத்தில் சிலை அமைத்தார் ஸ்ரீவித்யாதீஷா தீர்த்தர். அதே போல், 32 அடி உயரத்தில், மத்வருக்கு உடுப்பியில் சிலை அமைத்தார். தற்போது, ஹரியானா மாநிலத்தில் உள்ள குருக்ஷேத்திரத்தில், 32 அடியில் பீமனுக்கு சிலை எழுப்பி பிரதிஷ்டை செய்யவுள்ளார். இதில், கைங்கரியம் செய்யவிருப்பம் உள்ளவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு: 9962014684, 8300640321.

தொகுப்பு: ராதாகிருஷ்ணன்

The post ஆன்மிகம் பிட்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: