வன்முறை ஒழித்த உலக அமைதி

கிறிஸ்துவம் காட்டும் பாதை

(மீக்கா 4: 1-7)

மனித இனம் பெருகத் தொடங்கிய காலத்தில் இனக்குழுக்களிடையே மோதல்கள் நடைபெற்று வந்தது. அது பெரும்பாலும் உணவுக்காகவும், பெண்களுக்காகவும் நடைபெற்றன. அரசமைந்த காலத்தில் எல்லைகளை ஆக்கிரமிக்கவும், வளங்களைக் கொள்ளையடிக்கவும், நாடுகளை வீழ்த்தி அடிமைகளை அழைத்துச் செல்லவும், கப்பம் வசூலிக்கவும் தங்களின் ஆதிக்கத்தைப் பிற நாட்டின் மீது நிலைநாட்டவும் உலகெங்கும் போர்கள் நடைபெற்றன.

நாகரிக உலகில்கூட கடந்த நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்கள் நடைபெற்றன. அதில் பல லட்சம் மக்கள் செத்து மடிந்தனர். நாடுகள் அவற்றின் வளங்களும் அழிக்கப்பட்டன. பல நாடுகள் கடன், வறுமை, பற்றாக்குறை, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வினால் அவதியுற்றன. உள் நாட்டில் அமைதியின்மையும் நிலையற்ற தன்மையு அதிகரித்தது. இத்தகையப் படிப்பினை இருந்த போதும், போர் வெறி இந்த நூற்றாண்டிலும் தொடர்கிறது. கடந்த ஓராண்டாக நடைபெறும் ரஷ்யா – உக்ரைன் போர் நாகரிகத்தின் அவமானமாக உள்ளது.

ஒவ்வொரு நாடும் அந்த நாட்டு மக்களின் உணவு, மருத்துவம் மற்றும் கல்விக்குச் செலவிடுவதைவிடப் பன்மடங்கு ராணுவத்திற்குச் செலவிடுவதே அதிகமாக உள்ளது.  இத்தகைய சூழலில் திருமறையில் காணப்படும் இப்பகுதி அமைதியை விரும்பி அதை நிறைவேற்றும் கடவுளை நமக்கு அறிமுகம் செய்கிறது. அதே சமயம் வன்முறையை நியாயப்படுத்தும் பகுதிகள் திருமறையில் இருப்பதை நாம் மறுப்பதற்கில்லை. இதில் சிறந்த கருத்தான அமைதியை விரும்பும் கடவுளை புரிந்து கொள்வது நமது கடமையாக உள்ளது.

கிறிஸ்துவுக்கு முன் எட்டாம் நூற்றாண்டில் நாடுகளுக்கிடையே போர்களும் உள்நாட்டில் நீதியற்ற சூழலும் நிலவி வந்தது. இத்தகைய சூழலில்தான் மீக்கா தீர்க்கர் இறைவாக்குரைப்பவராக கடவுள் பற்றிய உயரிய சிந்தனைகளைக் கூறியுள்ளார். இஸ்ரவேல் நாட்டின் சீயோன் மலை கடவுள் குடியிருக்கும் புனித மலையென அக்காலத்தில் கருதப்பட்டது. எருசலேம் என்றால் அமைதியின் நகரம் (City of Peace) என்று பொருள். மீக்கா தீர்க்கன் கடவுள் இஸ்ரவேல் நாட்டில் மட்டுமல்ல அவர் உலக நாடுகளுக்கிடையேயும் அமைதியை விரும்பி அதை செயல்படுத்தும் கடவுளாகச் சித்திரிக்கிறார். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

1) உலகத்தில் பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் எருசலேமை நோக்கி வருவார்கள். கடவுள் அவர்களுக்குத் தமது வழிகளைக் கற்பிப்பார். அவர்களும் அவர் கற்பித்த நெறிகளின் படி நடப்பார்கள்.

2) கடவுள் பல மக்களினங்களுக்கு இடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார். இதனால் நாடுகளுக்கிடையே போர்கள் தவிர்க்கப்படும்.

3) வலிமை மிக்க நாடுகளுக்குக்கூட அவர் நீதி வழங்குவார்.

4) இதன் விளைவாக அந்த நாட்டினர் போர் எண்ணத்தைக் கைவிடுவார்கள். அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டி களைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள். இவ்வாறு போர்க்கருவிகள் உணவு உற்பத்திக் கருவிகளாகும். ராணுவம் கலைக்கப்படும். நாடுகளுக்கிடையே நட்பும் உறவும் அதிகரிக்கும்.

5) போருக்கான தேவை இல்லாமற் போனதால் இனி அந்த நாடுகளில் போர்ப் பயிற்சி நடைபெறாது. ராணுவச் செலவு முற்றிலுமாக நீங்கி நாட்டின் வருமானம் மக்கள் நலனுக்காக செலவிடப்படும்.

6) யாருக்கும் எங்கிருந்தும் அச்சுறுத்தல் இருக்காது. அவரவர் தங்கள் உழைப்பில் மகிழ்ச்சியோடும் அமைதியோடும் வாழ்வார்கள்.

7) ஒரு தெய்வ நம்பிக்கை பிறர்மீது திணிக்கப்படாது. அவரவர் அவர்களின் கடவுளை வழிபடும் சுதந்திரம் இருக்கும்.

8) இஸ்ரவேலின் கடவுள் போர் மற்றும் இதர காரணங்களால் நாடிழந்தவர்களையும், வீடிழந்தவர்களையும் ஒன்றுசேர்த்து அவர்களை வலிமைப்படுத்துவார்.

கடவுள் உலக அமைதியை விரும்புகிறவர். போர்களையும் வன்முறையையும் உயிரிழப்புகளையும் அவர் ஆதரிப்பதில்லை எனும் செய்தி நமக்கு நல் நம்பிக்கை அளித்து வழிகாட்டுகிறது.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

The post வன்முறை ஒழித்த உலக அமைதி appeared first on Dinakaran.

Related Stories: