பெரியார், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

திருவள்ளூர், செப். 20: அண்ணா, பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடைபெறவுள்ளதாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த மாதம் 5ம் தேதியும், தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு 6ம் தேதியும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டிகள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே நடைபெறும் இந்த பேச்சுப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதற் பரிசாக ₹5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ₹3 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ₹2 ஆயிரமும் வழங்கப்படும்.

மேலும், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரை தனித்தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகையாக ₹2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். பள்ளிப் போட்டியானது முற்பகல் 10 மணிக்கும், கல்லூரிப் போட்டியானது பிற்பகல் 2 மணிக்கும் தொடங்குகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பயிலும் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி கல்வி இணை இயக்குநர் வாயிலாக அந்தந்த கல்லூரி முதல்வரிடமும், பள்ளி மாணவ, மாணவிகள் முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியரிடமும் அனுமதிபெற்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் இதில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

The post பெரியார், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: