மெய்யூர் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ₹14 கோடியில் கட்டப்படும் உயர்மட்ட பால பணிகள் 98 சதவீதம் நிறைவு:  ஓரிரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும்  அதிகாரிகள் தகவல்

ஊத்துக்கோட்டை,செப். 20: ஊத்துக்கோட்டை அருகே மெய்யூர் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் உயர்மட்ட பால பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் இந்த பாலத்தை திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே பூண்டி பகுதியில் கடந்த 2020 டிசம்பர் மாதம் மழை பெய்து ஏரி நிரம்பியது. அப்போது ஏரியில் இருந்து 500 கன அடி முதல் படிப்படியாக உயர்த்தி 10 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் வழித்தடமான மெய்யூர் தற்காலிக தரைப்பாலம் துண்டிக்கப்பட்டது.

இதனால் மெய்யூர் ஆவாஜிபேட்டை, வெம்பேடு, செம்பேடு, வெங்கல், மாளந்தூர், எரையூர், மொன்னவேடு, சித்தம்பாக்கம், அரும்பாக்கம், மேலானூர், மூலக்கரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவள்ளூர் செல்லமுடியாமல் அவதிப்பட்டனர். மேலும், திருவள்ளூர்-மெய்யூர் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இவர்கள் திருவள்ளூர் செல்ல வேண்டுமானால் சீத்தஞ்சேரி அல்லது வெங்கல் வழியாகத்தான் செல்ல வேண்டும். அவ்வாறு செல்ல 15 முதல் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில் மெய்யூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ₹13.60 கோடி செலவில் புதிய பாலம் கட்டப்பட்டு வருவதால் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. மேலும் இந்த தரைப்பாலம் கடந்த 2021 நவம்பர் மாதம் பெய்த மழையால் துண்டிக்கப்பட்டது. மீண்டும் போடப்பட்ட இந்த தற்காலிக தரைப்பாலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும் பூண்டி ஏரி திறப்பால் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் மெய்யூர் ஆற்றின் குறுக்கே தற்காலிக தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு, போக்குவரத்து தொடங்கியது. இதனருகில் புதிய பாலம் கட்டுமானப் பணிகள் 98 சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. பணிகள் நிறைவடைந்து இந்த பாலம் இன்னும் ஓரிரு மாதங்களில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மழை காலத்திற்குள் திறக்க வேண்டும்
உயர்மட்ட பாலம் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- இனி வர இருப்பது மழைக் காலம். தற்போது ஏற்கனவே ஆற்றில் தண்ணீர் செல்கிறது. மழை அதிகரித்தால் மீண்டும் பூண்டி ஏரி நிரம்பி தண்ணீர் திறக்கப்படும். அப்போது தற்காலிக தரைப்பாலம் அடித்துச்செல்லப்படும். எனவே விரைவில் உயர்மட்ட பாலப் பணிகளை முடித்து, அதனை விரைவில் திறக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

The post மெய்யூர் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ₹14 கோடியில் கட்டப்படும் உயர்மட்ட பால பணிகள் 98 சதவீதம் நிறைவு:  ஓரிரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும்  அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: