எட்டாததையும் எட்டச் செய்யும் எண் எட்டு-8

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சீ ர்காழி கோவிந்தராஜனுக்காக நிறைய பக்தி பாடல்களை எழுதித் தந்த உளுந்தூர்பேட்டைசண்முகம் திருக்கண்ணபுரம் திருத்தலம் பற்றிய ஒரு பாடலை இப்படிப் பாடியிருப்பார். எட்டெழுத்தைச் சொல்லி கிட்ட நெருங்கிடுவேன் என்னைத் தெரிகிறதா என்றே கேட்டிடுவேன் கட்டி அணைத்து எனக்கு கை கொடுப்பான் கண்ணன் எட்டெழுத்துச் சொன்னால் கண்ணன் அருகில் வந்து கட்டி அணைப்பான் என்பது பாடலின் சாரமான கருத்து.

8 என்பது காலத்தோடு தொடர்பு கொண்ட எண். அதனால் இதனை”கால எண்” என்பார்கள். நீங்கள் எட்டு என்ற எண்ணை எழுதிப் பார்த்தால், அதில் மேலே ஒரு வட்டமும் கீழே ஒரு வட்டமும் ஒரு வளையம் போல் இணைந்திருக்கும். இதை மேலிருந்தும் கீழே இருந்தும் கண்டாலும் ஒரே விதமாகவே தோற்றம் அளிக்கும். இந்த சிறப்பு வேறு எண்ணுக்குக் கிடையாது.

மந்திரங்களிலே ஓரெழுத்து மந்திரம் (ஏகாக்ஷரம்) ஈரெழுத்து மந்திரம், மூன்றெழுத்து மந்திரம், நான்கெழுத்து மந்திரம், பஞ்சாட்சரம் ஆகிய ஐந்து எழுத்து மந்திரம், என்று அட்சரங்களின் கணக்கில் மந்திரங்கள் உண்டு. அதில் எட்டெழுத்து மந்திரம்தான் “ஓம் நமோ நாராயணாய” என்கின்ற பெரிய திருமந்திரம். இந்த மந்திரத்தைத்தான், வாள் வலியால் பெருமாளிடம் திருமங்கை ஆழ்வார் பெற்றார். அதைத்தான் முதல் பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் “நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்” என்று பாடினார்.

இவர் எட்டெழுத்து மந்திரத்தைப் பெற்ற அந்த நிகழ்ச்சியே சீர்காழிக்கு பக்கத்தில் திருவாலி திருநகரியில், பங்குனி மாத உற்சவத்தில், விழாவாக நடைபெறுகிறது. அன்று லட்சக்கணக்கான மக்கள் கூடி, இந்த விழாவை கண்டு களிப்பார்கள். திருவேடுபரி உற்சவம் என்று இந்த உற்சவத்துக்குப் பெயர். இப்படி எட்டு எழுத்து பெருமை பெற்றது. அந்த எட்டு என்கிற எண்ணின் பெருமைகள் பல உண்டு. சிலவற்றைக் காண்போம்.

எண் கணிதத்தில் 8 என்கிற எண் சனி பகவானுக்கு உரியது. உடனே எல்லோரும் பயப்படுவார்கள். எட்டு வேண்டாம் என்று நினைப்பார்கள். ஆனால் எட்டு என்கிற எண் நீதியையும் நேர்மையையும் குறிக்கக்கூடிய எண். ஒருவன் செய்கின்ற செயலின் விளைவை அனுபவிக்கச் செய்வது இந்த எட்டாம் எண்தான்.எண் 8ல் பிறந்தவர்கள் மிதமிஞ்சிய மனோதிடம் உள்ளவர்கள். கடின உழைப்பாளி, பிறர் உதவியை எதிர்பார்க்க மாட்டார்கள். தெளிந்த அறிவும், எப்பொழுதும் தொழில் பற்றி ஏதாவது சிந்தித்துக்கொண்டும் இருப்பார்கள். இவர்களுக்கு வெற்றி என்பது எளிதாக கிடைத்துவிடாது இருப்பினும் எதையும் கஷ்டப்பட்டு வெற்றி காண்பார்கள்.

8 என்பதற்கு “எதையும் எட்ட வேண்டும்” என்கின்ற பொருளும் அடங்கி இருப்பதால் முயற்சியையும் ஊக்கத்தையும் குறிக்கக்கூடிய எண்ணாக இருக்கிறது. ஜோதிட சாஸ்திரத்தில் எட்டாம் இடம் என்பது ஆயுள் பாவத்தைக் குறிக்கக்கூடியது. எனவே அந்த இடம் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் முதலில் இந்த எட்டாம் இடம் கெட்டு இருக்கிறதா வலிமையாக இருக்கிறதா என்பதைப் பார்ப்பார்கள்.

திருமணப் பொருத்தத்தில் எட்டாம் இடம் அவசியம் பார்க்க வேண்டும். அது கணவன் அல்லது மனைவியினுடைய வாக்கு ஸ்தானமாகவும் அமைந் திருக்கிறது. குடும்பஸ்தானமாகவும் அமைந்திருக்கிறது.

அஷ்டகவர்க்கம்

ஜோதிடக் கணக்குகளை நுட்பமாகப் பார்ப்பதற்கு அஷ்டவர்க்கம் என்று எட்டு வகையான வர்க்கக் கணக்குகளை போட்டுப் பார்ப்பார்கள்.பொதுவாக கிரகங்கள், சாதகரின் பிறப்பு சமயத்தில், சாதகத்தில் தாங்கள் நின்ற இடத்திலேயே நிரந்தரமாக நிற்பதில்லை. அவை எப்பொழுதும் சஞ்சரித்துக் கொண்டேயிருக்கின்றன. உதாரணமாக பிறப்பு சமயத்தில் சாதகத்தில் சூரியன் மேஷராசியில் நின்றால், பிறப்பு நிகழ்ந்த மூன்றாம் மாதத்தில் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். இது போலவே மற்ற கிரகங்களும் சஞ்சரித்துக் கொண்டேயிருக்கின்றன.

இவ்வாறு கிரகங்கள் பன்னிரண்டு ராசிகளிலும் கோட்சாரத்திலும் (கோள்+சாரம்) (Zodiac – Constellations) சஞ்சரிக்கும் நிலையில், பிறப்பு சாதகத்திற்கான கிரக சஞ்சார நிலைகளை மையமாக வைத்து கணக்கிடும்போது, கிரகங்கள் ஒரு சில ராசிகளில் சஞ்சரிக்கும்போது நற்பலன்களையும், ஒரு சில ராசிகளில் சஞ்சரிக்கும்போது தீயபலன்களையும் தருவதை அறிய முடிகிறது.

கோட்சாரத்தில் ராகு, கேது நீங்கலாக மற்ற ஏழு கிரகங்களும் தரும் அனுகூல, பிரதிகூல பலன்கள், பிறப்பு சாதகத்தில் ராகு, கேதுக்கள் நீங்கலாக மற்ற ஏழு கிரகங்கள் மற்றும் லக்னம் அமைந்த ராசி (7+1=8) இவைகளை மையப் படுத்தி கூறப்படுவதால் இதற்கு ‘‘அஷ்டகவர்கம்’’ என்று பெயர். அஷ்டகவர்கத்தில் ராகு, கேதுக்களுக்கு இடமில்லை. அஷ்டகவர்க முறையில் ஒரு கிரகம் ஒரு ராசிக்கு எட்டு வர்க பலன்களைத் தரும். அதில் சுப வர்கம், அசுபவர்கம் இரண்டும் கலந்திருக்கும். சுப வர்கத்தை அனுகூல பிந்துக்கள் என்றும், அசுபவர்கத்தை பிரதிகூல ரேகைகள் என்றும் குறிப்பிடுவது வழக்கம்.

அஷ்டலட்சுமி

நமது சமயத்தில் முப்பது முக்கோடி தேவர்கள் என்கிற கணக்கு இருக்கிறது. அதில் அஷ்டவசுக்கள் வருவார்கள். அட்ட வசுக்கள் மனுவின் மைந்தனான பிரஜாபதியின் எட்டு மகன்கள். அவர்களின் பெயர்கள் தரா, துருவா, சோமா, அஹா, அனிலா, அனலா, பிரதியுஷா மற்றும் பிரபாசா ஆகும். அந்த வசுக்களில் ஒருவர்தான் மகாபாரதத்தில் தேவவிரதன் என்கிற பெயரோடு பிறந்து பீஷ்மர் என்கிற பெயரோடு சிறப்பு பெறுகிறார். அவர் யுத்தபூமியில் கண்ணனை முன்னே நிறுத்தி சொன்னதுதான் விஷ்ணு சகஸ்ர நாமம்.

அஷ்டவசுக்கள் போலவே மகாலட்சுமியின் தோற்றங்கள் எட்டு. இதனை அஷ்டலட்சுமி என்பார்கள் சென்னையில் அடையாருக்கு பக்கத்திலே பெசன்ட் நகரில் கடற்கரை ஓரத்திலே அஷ்டலட்சுமித் திருக்கோயில் உண்டு மும்பை நகரிலும் புகழ் வாய்ந்த அஷ்டலட்சுமிக் கோயில் உண்டு. இக்கோயில்களில் எட்டு சன்னதிகளில் எட்டு லட்சுமிகள் எழுந்தருளியுள்ளனர். எட்டு லட்சுமிகளின் பெயர்களும் அவர்கள் அருளும் பேறுகளும்:-

1.ஆதிலட்சுமி: நோய்நொடி அற்ற உடல் நலம் பெறுதல்

2.தான்யலட்சுமி: உணவுத் தானியங்கள் தாராளமாகக் கிடைத்து பசிப்பிணி நீங்கல்

3.தைரியலட்சுமி: வாழ்வில் ஏற்படும் எத்தகைய இடர்ப்பாடுகளையும் எதிர்கொண்டு சமாளிக்க தைரியம் பெறுதல்.

4.கஜலட்சுமி: வாழ்வில் அனைத்து நற்பாக்கியங்களையும் பெறுதல்.

5.சந்தானலட்சுமி: குழந்தைப்பேறு சித்தித்தல்.

6.விஜயலட்சும: கைக்கொண்ட நற்காரியங்களில் வெற்றி ஈட்டல்.

7.வித்யாலட்சுமி: கல்வியும் ஞானமும் பெறுதல்.

8.தனலட்சுமி: செல்வம் பெருகிச் சேர்தல்…

அஷ்டலட்சுமியை வணங்கினால் எட்டு விதமான செல்வங்கள் கிடைக்கும். அதனை அஷ்ட ஐஸ்வர்யங்கள் என்பார்கள்.

அட்டமா சித்திகள்

1.அணிமா – அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.

2.மகிமா – மலையைப் போல் பெரிதாதல்.

3.இலகிமா – காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.

4.கரிமா – கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.

5.பிராத்தி – எல்லாப் பொருட்களையும் தன்வயப்படுத்துதல், 6.பிராகாமியம் – (கூடுவிட்டுக் கூடு பாய்தல்)

7.ஈசத்துவம் – நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.

8.வசித்துவம் – அனைத்தையும் வசப்படுத்தல்

அனி மாதி சித்திகளானவை கூறல்
அணுவில் அணுவின் பெருமையின் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குந் தானாத
லென்றெட்டே
என்பது திருமூலர் திருமந்திரம்.

அட்ட வீரட்டத் தலங்கள்

வைணவத்தில் மட்டும் அல்ல, எட்டு என்கிற என்கிற சைவத்திலும் உயர்வானதுதான் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் சிவபெருமானுக்கு உள்ள தலங்களில் எட்டு தலங்கள் சிவபெருமானின் வீரத்தைக் காட்டு கின்ற அட்டவீரட்டத் தலங்கள். அட்ட வீரட்டத் தலங்கள் அனைத்துமே தமிழ்நாட்டில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

1.திருக்கண்டியூர்: சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்க ழிந்த தலம்

2.திருக்கோவலூர்: அந்தகாகரனைக் கொன்ற இடம்

3.திருவதிகை: திரிபுரத்தை எரித்த இடம்

4.திருப்பறியலூர்: தக்கன் தலையைத் தடிந்த தலம்

5.திருவிற்குடி: சலந்தராசுரனை வதைத்த தலம்

6.திருவழுவூர்: கயமுகாசுரனைக் கொன்று தோலை உரித்துப் போர்த்துக்கொண்ட தலம்

7.திருக்குறுக்கை: மன்மதனை எரித்த தலம்

8.திருக்கடவூர்: கூற்றுவனை உதைத்த தலம்.

திசைகள் எட்டு

ஒரு மனிதன் தன்னுடைய முகத்தை சுருக்கினால், ‘‘என்ன, முகம் எட்டு கோணலாக இருக்கிறது?’’ என்பார்கள். அஷ்டகோணல் என்று இதற்குப் பெயர். மிகச்சிறந்த முனிவர்களில் ஒருவர் இருந்தார். அவருடைய உடம்பை எல்லோரும் கேலி செய்தனர். ஆனாலும் அவர் அதைப்பற்றி கவலைப்படவில்லை. அவருக்கு நம்முடைய புராண வரலாற்றில் ஒரு முக்கியமான இடம் உண்டு. அவர்தான் அஷ்டவக்ரகர். அஷ்டவக்கிரர் ஜனக மகாராஜருக்கும், யாக்ஞவல்க்கியருக்கும் குருவாக இருந்துள்ளார். அவர் சொன்னது அஷ்டவக்ர கீதை.

கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு என்று எட்டுத் திசைகளைச் சொன்னார்கள். இந்த எட்டுத் திசைக்கும் ஒவ்வொரு தேவதை உண்டு. அஷ்டதிக் பாலகர்கள் என்பார்கள். யாகங்களையும் ஹோமங்களையும் செய்கின்றபொழுது இந்த அஷ்டதிக் பாலகர்களையும் ஆவாகனம் செய்து வழிபாடு நடத்தி விட்டுத்தான் ஹோமங்களைச் செய்தார்கள்.

பெருமாள் கோயில்களிலும் எட்டுவிதமான காவலர்கள் உண்டு. இவர்களை வாயில் காப்பவர்கள், கோயில் காப்பவர்கள், என்றெல்லாம் ஆண்டாள் பாடுகின்றாள். எட்டுத் திசைகளைச் சொன்னோம். இந்த எட்டுத் திசைகளையும் ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனை, புஷ்பதந்தா, சர்வபௌமா, சுப்ரதீகா, என்ற எட்டு யானைகள் தாங்குவதாக ஒரு கருத்து உண்டு. அதற்கு அஷ்டதிக் கஜங்கள் என்று பெயர். சுவாமி மணவாள மாமுனி வைணவத்தைப் பரப்புவதற்காக எட்டு பேரை நியமித்தார். அவர்களுக்கு அஷ்டதிக் கஜங்கள் என்று பெயர்.

எட்டு எட்டாக வாழ்க்கை

ஒருவருடைய வாழ்க்கையை எட்டு எட்டாகப் பிரித்து அந்தந்த பலன்களை அந்தந்த எட்டில் அனுபவிக்க வேண்டும் என்பார்கள். இதை எளிமையாக ஒரு திரைப்படப்பாடலில் கவிஞர் வைரமுத்து தந்திருப்பார்.

முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல
மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல
நான்காம் எட்டில் பெறாதது குழந்தை யுமல்ல
ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல
ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமல்ல
எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்ல

தானாகத் தோன்றிய தலங்கள்

வைணவத்தில் தானாகத் தோன்றிய தலங்கள் என்று சில தலங்களைச் சொன்னார்கள். அந்த தலங்கள் எட்டு. “ஸ்ரீரங்கம் வேங்கடாத்ரிச்ச ஸ்ரீமுஷ் ணம் தோதபர்வதம் ஸாளக்ராமம் புஷ்கரம் நரநாராயணாச்ரமம் நைமிஷம் சேதி மே ஸ்தானானி அஸௌ முக்தி ப்ரதானி வையே து அஷ்டாக்ஷர ஏகைக: வர்ணமூர்த்தி: வஸாமி அஹம்” என்ற புராண ஸ்லோகம் கூறும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களாகிய

1. ஸ்ரீரங்கம்
2. திருவேங்கடம்
3. ஸ்ரீமுஷ்ணம்
4. நாங்குநேரி
5. முக்திநாத்
6. புஷ்கரம்
7. பத்ரிநாத்
8. நைமிசாரண்யம்

என்னும் எட்டு திருத்தலங்களும் நாராயண மந்திரமாகிய எட்டெழுத்து மந்திரத்தில் உள்ள எட்டு எழுத்துகளையும் குறிக்கும்.

அஷ்டநாகங்கள்

செய்யுள் வகைகளில் ஒரு வரிக்கு எட்டு சீர் அமைந்த விருத்தப்பாக்களை எண்சீர் விருத்தம் என்பார்கள். பசுக்கள் யானைகள், திசைகள் எட்டாக இருப்பதைப்போலவே நாகங்களும் அனந்த அல்லது சேஷ நாகா, குலிகா, வாசுகி, சங்கபால, தக்ஷக், மஹாபத்மா, பத்மாமற்றும் கார்கோடகா எனும் எட்டு நாகங்கள். அதனை அஷ்டநாகங்கள் என்பார்கள். திருமணத்திலும் கோவில்களிலும் காப்பு கட்டும்பொழுது இந்த அஷ்ட நாகப் பிரதிஷ்டை செய்வார்கள். எண்குணத்தான் பகவானுக்கு ஏராளமான குணங்கள் உண்டு. ஆயினும் எட்டு குணங்களை மிக முக்கியமாகச் சொல்வார்கள் என்று திருவள்ளுவரும் எண்குணத்தான் இதைக் குறிப்பிடுகின்றார்.

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை.

அஷ்ட பைரவர்கள்

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய கையால் அளந்தால் 8 சாண் அளவுதான் உயரம் இருக்கும் என்று ஒரு கணக்கு உண்டு. “எண் சாண் உடம்பு” என்று ஒரு சொல்லாடல் உண்டு. பகவானின் அவதாரங்கள் எண்ணற்றவை. அதில் மிக முக்கியமாக 10 அவதாரங்கள். அந்த பத்து அவதாரங்களில் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். அது மட்டுமில்லை அவன் எட்டாவது பிள்ளையாகப் பிறந்தான்.

முருகனுடைய தலங்களில் ஒரு பிரசித்தி பெற்ற தலத்துக்கு எட்டுக்குடி என்று பெயர். திதிகள் பல இருந்தாலும் இரண்டு திதிகள் விலக்கப்பட்ட திதிகளாக (சுப காரியங்கள் செய்யக்கூடாத திதிகளாகச் சொல்லுவார்கள்) அஷ்டமி என்பது கிருஷ்ணபகவான் பிறந்த திதி. நவமி என்பது ராமன் பிறந்த திதி. சைவத்தில் பைரவ வழிபாடு என்று உண்டு. அதிலும் தேய்பிறை அஷ்டமியிலே இந்த வழிபாடு விசேஷம். இந்த பைரவர்களும் எட்டுவிதமாக இருப்பார்கள். அவர்களுக்கு அஷ்ட பைரவர்கள் என்று பெயர்.

நம்முடைய நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த மாதம் ஆகஸ்ட் மாதம். இந்த ஆகஸ்ட் மாதம் எட்டாவது மாதம்.

எண் மலர்

“திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்”. மாணிக்கவாசகரின் திருவாசகம் மிக மிக உயர் வான நூல். உருக்கமான நூல். சிவபெருமானே சொல்லச்சொல்ல எழுதிய நூல். மணிவாசகரின் திருவாசகத்தை எட்டாம் திருமுறையாகத்தான் வைத்தார்கள்.மலர் வழிபாடு என்பது ஆன்மீகத்தில் முக்கியம் அந்த மலர்களில் எட்டு வகையான மலர்களைக் கொண்டு வழிபட வேண்டும் என்று சாத்திரம் சொல்லுகின்றது. “எண் மலர் கொண்டு” என்பது பாசுரம் அந்த மலர்களினுடைய வரிசை புன்னை செண்பகம் பாதிரி வெள்ளருக்கு நந்தையாவட்டை அரளி நீலோற்பவம் தாமரை.

அஷ்ட பிரபந்தம்

ஒரு குழந்தை தாயின் கருவறையில் 10 மாதங்கள் இருக்கும் ஆனால் எட்டாவது மாதத்தில்தான் குழந்தை முழு வளர்ச்சி அடையும்.‘‘பிள்ளை பெருமாள் ஐயங்கார்’’அற்புதமான நூலை எழுதியிருக்கிறார். அந்த நூலுக்கு அஷ்ட பிரபந்தம் என்று பெயர். ஒரு புலவர் இந்த நூலைப் படித்து விட்டால் அவர் பெரும் புலவராகத் திகழலாம் என்கின்ற வழக்கு தமிழ் வல்லுநர்களிடம் உண்டு. இதனுடைய அமைப்பும்பொருள் சிறப்பும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத தன்மையும் கருத்தில் கொண்டு அஷ்ட பிரபந்தம் கஷ்ட பிரபந்தம் என்று சொல்வார்கள். ஆனால் அற்புதமான பிரபந்தம்.

அஷ்ட பந்தனம்

திருக்கோயில்களிலே குடமுழுக்கு செய்கின்ற பொழுது அஷ்ட பந்தனம் என்று எட்டு வகை பொருட்களை மருந்தாகக் கட்டி குடமுழுக்கு செய்வார்கள். அந்த எட்டு பொருள்கள்: அஷ்டபந்தனம் – சுக்கான்கல், கொம்பரக்கு, சாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமை வெண்ணெய், குங்கிலியம், நற்காவி வடமொழியிலே அஷ்டகம் பாடுதல் என்று ஒரு முறை உண்டு. பல பாராயண நூல்கள் 8 பாடல்களில் (பலன் சேர்க்காமல்) அமைந்ததால் அவற்றை அஷ்டகம் என்பார்கள். மகாலட்சுமி அஷ்டகம், கிருஷ்ணாஷ்டகம், ரங்கநாதர் அஷ்டகம் என்று எல்லா தேவதைகளுக்கும் இந்த அஷ்டக நூல் பாடி வைத்திருக்கிறார்கள். இப்படி பல சிறப்புகளைக் கொண்டது எட்டாம் எண்.

தொகுப்பு: முனைவர் ஸ்ரீராம்

The post எட்டாததையும் எட்டச் செய்யும் எண் எட்டு-8 appeared first on Dinakaran.

Related Stories: