பண்பாட்டு நாயகர் வழிபாடு

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வழிபாட்டின் வேர்களைத் தேடி… (Hero – God Worship)-6

வரலாற்றுக்கு முந்தைய மக்களின் வாழ்வில் அழிவில் இருந்து மக்களைக் காக்கும் பண்பாட்டு நாயகர் (Cultural Hero) வழிபடு கடவுளாகப் போற்றப்பட்டதை தொன்மங்கள் காட்டுகின்றன. இவர்கள் பின்னர் புராணங்களிலும் நாயகர்களாக இடம் பெற்றனர். இவர்களின் கதைகள் பிறப்புத் தொன்மத்துடன் தொடங்கி வீர தீர பராக்கிரம சாகஸங்களை அடுக்கிக் கூறுவதாக நீண்ட கதையாக அமையும். பிற்காலங்களில் இவர்களுக்குத் தெய்வங்களின் உதவிகள் கிடைக்கும். இவர்களும் தெய்வங்களாகி விடுவர். இவர்களை பின்பற்றுவோரும் பக்தர்களாகி விடுவர். வழிபாடுகள் விரிவாக்கப்படும். ஒரு வேளை, ஒரு நாள் பூஜைகள் பத்து நாள் பூஜைகளாகிக் கொண்டாட்டங்களாக விரிவடையும். மற்ற இனத்தவரும் கலந்து கொள்ளும் வகையில் இதன் செல்வாக்குப் பெருகும்.

காவல் நாயகன் (ரட்சகன்)

கிரேக்கச் சொல்லான சொட்டேர் (Soter) என்ற உடல்நலம் காக்கும் மருத்துவரையும் ஆன்மிக நலம் அளிக்கும் இரட்சகரையும் குறிக்கும். எனவே சொட்டியரியாலஜி (Soteriology) என்ற சொல் இறையியல் துறையில் இரட்சிப்பியல் பற்றிய கருத்துக்களை விளக்குகிறது. ஆக பண்பாட்டு நாயகன் என்ற கருத்தியல் (ideology) காலப்போக்கில் மக்களைக் காக்கும் காவல் நாயகன் என்ற கருத்தியலாக வளர்ந்துள்ளது. இரட்சிப்பு அளிப்பவன், மக்களைக் காக்கின்றவன், ரட்சகன் பிற்காலத்தில் இறைவனாகி விடுகிறான்.

பண்பாட்டு நாயகனின் பண்புகள்

காவியத்தலைவன் (Epic hero) அல்லது தொன்ம நாயகன் (Mythological hero) எனப்படுவோர், இனம் சமயம், பண்பாடு சார்ந்த நாயகர்களாக உருவாகின்றனர். இவர்களுடைய முக்கியப் பண்புகளாக மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குதல், நன்மை செய்தல், உயர்ந்த நோக்கத்தைக் கொண்டிருத்தல், தலைமை தாங்கி நடத்திச் செல்லுதல், லட்சியவாதிகளாய் இருத்தல், இவர்களைப் பலரும் பின்பற்றுதல், சிக்கல்களைத் திறமையாகத் தீர்த்தல், சாவைத் துணிவுடன் சந்தித்தல், தனது மக்களைத் தீமைகளிடமிருந்தும் தீய சக்திகளிடம் இருந்தும் மீட்டல், இறுதியில் மறைந்து நதியாகவோ நட்சத்திரமாகவோ மாறிப்போதல் ஆகிய தன்மைகளைக் கொண்டவரே பண்பாட்டு நாயகர் என்று கருதப்படுகின்றார்.

பண்பாட்டு நாயகர் என்ற சொல்லை heilbringer என்ற ஜெர்மானியச் சொல்லில் இருந்து Kurt Breysig எடுத்தார். இச்சொல்லுக்கு ரட்சகர் Savior என்பது பொருள். இவரும் மனிதராக பிறந்து மனிதராக வாழ்ந்தவர் என்றாலும் இறுதியில் “வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுபவர் ஆவார். இவருடைய மரணத்திற்கு பின்பு இவரை மக்கள் தெய்வமாக்கி விடுவர்.

பண்பாட்டு நாயகனின் அடையாளம்

பண்பாட்டு நாயகர்களாக இருப்பதற்கு முதலில் ஒரு பிம்பம் தேவைப்படுகிறது அது ஆயுதம் (சூலாயுதம், வேல், கலப்பை) சார்ந்ததாகவோ தோற்றம் சார்ந்ததாகவோ (விலங்கின்- சிங்கம், புலி, சிறுத்தை என்றொரு அடையாளம், காற்று, இடி, மின்னல் போன்றவற்றின் அடையாளம்) விளங்கும் ஒரு இலக்கு நோக்கியதாக இவர்களின் பிம்பம் மக்கள் மனதில் உருவாக்கப்படும். இவர்களால் பல நன்மைகள் கிடைக்கும்.

இதனால் மக்களிடையே பெரும் நம்பிக்கையை இவர்கள் சம்பாதித்து இருப்பார்கள். இவர்களின் சாகசங்கள் மனித சக்தியின் எல்லைக்கு உட்டுப்பட்டதாகவே இருக்கும். இவர்கள் அழுகை, வீரம், விவேகம் போன்ற உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியவர்களாக இருப்பார்கள். பண்பாட்டு நாயகர்கள் நெருப்பு, இசை, வேளாண்மை, பாடல், சமயம், சட்ட விதிமுறைகள் போன்றவற்றை முதன் முதலில் மனித சமுதாயத்திற்கு அறிமுகம் செய்தவர்களாக இருப்பதுண்டு.

இவர்கள் செய்யும் செயல்கள் நம்ப இயலாத ஆனால் சுவாரஸ்யமானவையாக வீரம் செறிந்தவையாக இருக்கும். இவர்களுடைய பிறப்பு அதிசயப் பிறப்பாக தாயின் கருவில் இருக்கும் போதே இவர்களுடைய சிறப்புக்கள் பற்றிய கதைகள் உருவாக்கப்படும். ஆணின் சேர்க்கையால் பிறக்காத குழந்தைகளாக சராசரி மனித குழந்தை பிறப்பாக இல்லாமல் காற்று, நெருப்பு, நீர் போன்ற இயற்கை மூலகங்களின் குழந்தைகளாக இருப்பதும் உண்டு. இவர்களின் வாழ்க்கை சாகசப் பயணமாகத் தொடங்கி முடியும்.

நெருப்பைக் கண்டறிந்த பண்பாட்டு நாயகர்கள்

கிரேக்கர்களின் சாகச நாயகன் ப்ரோமோதியுஸ் நெருப்பை கண்டுபிடித்துக் கொடுத்ததால் பண்பாட்டு நாயகனாக போற்றப்படுகிறான். அதுபோல வட அமெரிக்கா தொன்மங்களில் வரும் ஓநாய் போன்றதொரு காட்டு நாய் சூரியன் அல்லது நட்சத்திரங்களிடமிருந்து நெருப்பைத் திருடிக் கொண்டு வந்து தன் இன மக்களுக்கு கொடுத்ததால் பண்பாட்டு நாயகன் தகுதி பெற்றது. அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் வழங்கும் தொன்மங்களில் ஒரு முயல் பண்பாட்டு நாயகனாக போற்றப்படுகிறது.

கடலோரத்தின் வடமேற்குப் பகுதியில் வழங்கும் கதைகளில் அண்டங்காக்கை பண்பாட்டு நாயகனாகப் போற்றப்படுகிறது. ஏனென்றால் இந்த காக்கை தன்னுடைய மாமாவான நீர் நாயிடமிருந்து நெருப்பைக் கொண்டு வந்து தன் இனத்து மக்களுக்குக் கொடுக்கின்றது. ஆக, நெருப்பைக் கொண்டு வந்து கொடுத்தவன் சாகச நாயகனாக பண்பாட்டு நாயகனாக அந்தந்த இன மக்களால் போற்றப்பட்டு பின்பு தெய்வ அந்தஸ்து பெற்று தெய்வமாகக் கருதப்படுகிறான்.

அக்கினி புத்திரன்

இந்தியத் தொன்மங்களில் பிறப்பின் அடிப்படையில் நெருப்புக்குப் பிறந்தவன் முருகன், அவன் அக்கினிபுத்திரன். அவன் இந்திராணியைச் சிறையெடுக்க விரும்பிய பத்மாசுரனிடம் இருந்து இந்திரலோகத்தையும் தேவர்களையும் காப்பாற்றினான். இவனைக் குன்றத்து நாயகன் என்று மலை வாழ் மக்கள் போற்றினர். சூர சம்ஹாரத்துக்குப் பிறகு இவன் இடிமழையை வழங்குகின்ற மருத நிலத்தின் தலைவனான இந்திரனின் மகளை மணந்ததால் மருத நிலத்தின் நாயகன் ஆனான். நெருப்பின் மகன் நீரின் மக்களை மணந்தான். திருப்பரங்குன்றத்தில் இத்திருமணம் முடிந்ததும் பெண்ணும் மாப்பிள்ளையும் அருகில் உள்ள தேவேந்திரர் மண்டகப்படிக்கு பாலும் பழமும் சாப்பிட வந்தருளுவர். இவன் தற்போது குறிஞ்சி, மருதம் என இரு நிலத்தின் நாயகனாக வணங்கப்படுகிறான். குறிஞ்சி நிலத்தினருக்கு மகன் மருத நிலத்தினருக்கு மருமகன் ஆவான்.

வெற்றி நாயகன் சிவன்

சிவன் என்னும் இனக்குழுத் தலைவன் சாகசப் பயணமாக (an expedition / adventurous journey) இமயமலையில் இருந்து தெற்கே மதுரை வரை பயணப்பட்டு வழியில் இருந்த இனக்குழுக்களை எல்லாம் தோற்கடித்து அவற்றின் குல மரபுச் சின்னங்களை (புலி, யானை, மான், நாகம்…) கைப்பற்றி, ஆடையாகவும் ஆபரணமாகவும் அணிந்த படி தாய்வழிச் சமூகத்தின் அரசியாக விளங்கிய மீனாட்சியைத் போரில் தோற்கடித்து அவளை மணந்து பழந்தமிழகத்தை ஆணாதிக்கச் சமுதாயமாக மாற்றி புதிய பண்பாட்டை உருவாக்கினான். இத்தகையப் பண்பாட்டு மாற்றத்தை நிகழ்த்திய சிவன் ஒரு பண்பாட்டு நாயகன் ஆனான். ஆண்மையின் அடையாளமாக வெற்றியின் சின்னமாக சிவந்த நிறத்தினனாகச் சீறும் குணத்தினனாக அறியப்பட்டான். சிவனும் மலைவாழ் மக்களில் ஒருவனாகத் தோன்றி மருத நிலத்தின் மருமனாக தெய்வ அந்தஸ்து பெற்றவன் ஆனான்.

மக்கள் நாயகன் மாயக் கண்ணன்

இந்து சமயத்தில் வரும் கீதாசாரம் உரைத்த கண்ணன் ஒரு பண்பாட்டு நாயகன் ஆவான். இவன் சராசரி மனிதன் இல்லை. சாகச நாயகன். Hero என்பதற்கு விளக்கம் சொல்லும் அறிஞர் ஒருவர், எல்லா மனிதர்களும் செய்யக் கூடியது அல்ல என்றாலும் மனிதர்களால் செய்ய கூடிய ஒன்றைச் செய்பவனே ஹீரோ என்பார். கண்ணன் மகாபாரதத்தின் நாயகன். நல்லவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைத்தவன். அவன் பல சூட்சுமங்களை சூழ்ச்சிகளை அறிந்தவன். வெற்றியே அவனது குறிக்கோள்.

எனவே, வெற்றி நாயகனான கண்ணனின் பிறப்பை கிருஷ்ண ஜெயந்தி என்றும் கோகுலாஷ்டமி என்றும் நட்சத்திரம், திதி என்று இரண்டு நாட்களில் கொண்டாடுகின்றனர். வேறு எந்த தெய்வத்துக்கும் இரண்டு நாள் கொண்டாட்டம் இல்லை. இந்த நாயகனுக்கு விருப்பமானவற்றை அவன் பிறந்தநாளில் செய்து அவன் மனத்தைக் குளிர்விக்கின்றனர். உணவுப் பண்டங்கள் மட்டுமல்லாது உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற அவனுக்கு விருப்பமான விளையாட்டுகளும் அந்நாளின் கொண்டாட்டத்தில் இடம்பெறுகின்றன. சிறுவர்களுக்கு அவனை பற்றிய கதைகள் படக் கதைகள் மற்றும் காணொளிகள் மூலம் கற்பிக்கப்படுகின்றன. ஆண், பெண், குழந்தைகள் என அனைவரும் விரும்புகின்ற மக்கள் நாயகன் கண்ணன்.

கடவுள் பூமி

பாலினேசியாவை சேர்ந்த மாவி (Mauvi) என்பவன் கடலின் அடியில் இருந்த நிலப்பரப்பை மேலே கொண்டு வந்தான். அதுவரை தணிவாக இருந்த வானத்தை மனிதர்கள் நிமிர்ந்து நடமாட இடம் கிடைக்கும்படி உயரத்திற்கு அனுப்பி விட்டான் என்ற கதை நிலவுகிறது. இவனும் மக்களுக்கு நெருப்பைக் கொண்டு வந்து கொடுத்து சமைத்து சுவையாகவும் ஆரோக்கியமாகவும் சாப்பிட உதவினான். பாலினேயாவில் மாவீரர் பற்றிய கதைகளை இன்றும் வழங்கி வருகின்றனர். கடலில் இருந்து நிலத்தை மீட்டுத் தருதல் என்ற கருப் பொருளில் தென்னிந்தியாவிலும் ஒரு தொன்மக் கதை நிலவுகிறது.

கடலுக்குள் தன் ஆயுதத்தை வீசி அந்த ஆயுதம் சென்ற பரப்பு வரை கடலை உள்ளே செலுத்தி நிலப்பரப்பைப் பெற்று அந்தப் பூமியை ‘கடவுள் பூமி’ என்று பெயரிடக் காரணமாக இருந்த பரசுராமனைக் கேரள மக்கள் ஒரு பண்பாட்டு நாயகனாகக் கருதிப் போற்றி வழிபடுகின்றனர். இவனை சுகுமாரன் என்றும் அழைக்கின்றனர். கேரள மக்கள் பரசுராமரைத் தெய்வமாகப் போற்றி வழிபடுகின்றனர். தங்கள் பிள்ளைகளுக்கு சுகுமாரன் என்று பெயர் சூட்டினர். எகிப்தில் நல்ல குமாரன் என்ற அடையாளத்துடன் ஒசிரிசின் மகன் ஹோரஸ் பண்பாட்டு நாயகனாகத் திகழ்கிறான். அந்நாட்டில் அவனே மற்ற ஆண்களுக்கு முன்னோடியாகவும் விளங்குகிறான்.

மகிழ்ச்சி நாயகன் மாவலி

சிறப்பான முறையில் ஆட்சி செய்தும் சூதினால் பாதாளத்திற்குள் தள்ளப்பட்ட மாவலி சக்கரவர்த்தி ஒரு பண்பாட்டு நாயகனாக கேரளத்தில் போற்றப்படுகிறார். அவர் தன் மக்களின் சுபிட்சத்தைக் காண வரும் நாளில் சாதி, மத பேதமின்றி அனைவரும் பாயசம் பப்படத்துடன் விருந்துண்டு புத்தாடை உடுத்தி மகிழ்கின்றனர். மன்னரும் மக்களின் மகிழ்ச்சியைத் கண்டு அகமகிழ்ந்து சென்று விடுவதாக நம்பிக்கை நிலவுகிறது. அஸ்தம் முதல் திருவோணம் வரை பத்து நாட்கள் வாசலில் போடப்படும் அத்தப் பூ கோலம் நாளுக்கு நாள் அதன் விரிவாக்கம் மக்கள் மாவலி சக்கரவர்த்திக்கு வழங்கும் மதிப்பையும் அன்பையும் எடுத்துக் காட்டுகிறது.

வேளாண் நாயகன் தேவேந்திரன்

தமிழகத்தில் நெல், வாழை, தென்னை, காளை, இஞ்சி மஞ்சள் போன்ற பல பயிர்களைத் தேவேந்திரன் பொன் ஊசி கொண்டு கோர்த்து தேவலோகத்தில் இருந்து பூமிக்குக் கொண்டு வந்து கொடுத்ததாகவும் அவனுடைய மகன் இங்கு வேளாண்மை செய்து இவற்றைத் தொடர்ந்து பயிரிட்டு வந்ததாகவும் தமிழகத்தில் ஒரு சமூகத்தினர் இடையே தொன்மக்கதை விளங்கி வருகிறது. இந்நாயகனின் பெருமைக்கும் இவ் வேளாண் குடி மக்களின் பாரம்பரியச் சிறப்புக்கும் பழனி செப்பேடுகள் (Ten Copper Plates) சான்றாதாரமாகத் திகழ்கின்றன.

இவர்கள் வேளாண் தொழிலில் ஈடுபடும்போது விதைத்தல், நாற்று பாவுதல், நாற்று நடுதல் போன்ற பணிகளைப் பெண்கள் செய்யும்போது தேவேந்திரனைப் போற்றி தேவேந்திரக் கும்மி பாடுகின்றனர். தேவேந்திரனை மல்லாண்டவர் என்ற பெயரில் வணங்கி மகிழ்கின்றனர். பொன் ஏர் பூட்டும் நாளில் தேவேந்திரனின் வாகனம் ஐராவதம் என்ற வெள்ளை யானை கொடியை ஊர்வலமாக எடுத்து வந்து சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர். சிலப்பதிகாரம் இந்திரனுக்கு ஒரு மாதம் கொண்டாடப்பட்ட இந்திர விழா என்ற பண்பாட்டு நிகழ்வை விளக்குகின்றது.

பசியும் பிணியும் போக்கி வசியும் வளனும் சிறக்க வேண்டும் என்று இந்திரனை வணங்கியுள்ளனர். தேவேந்திரன் வட நாட்டில் வைதீகர் பௌத்தர், சமணர் போன்றொரின் போற்றுதலுக்கு உள்ளாகி இருந்தான். தென்னாட்டிலும் மருத நிலத்தின் தலைவனாக விளங்கினான்.

இவ்வாறு உலகெங்கிலும் பல பண்பாட்டு நாயகர்கள் வழிபடு தெய்வங்களாக இன்றும் விளங்குகின்றனர். இன்னும் நாட்டுப்புறத் தெய்வங்கள் சிலர், சமயத் தலைவர்கள் ஆகியோர் பண்பாட்டு நாயகர்களாக இருந்து வழிபடு தெய்வமாகி உள்ளனர். இவர்கள் ஏழைகளைத் துன்பங்களில் இருந்து காத்தவர்கள். நோய்களைத் தீர்த்தவர்கள். தன்னலம் கருதாது பொது நலம் பேணும் நல்லவன் வாழ்வான் என்ற நம்பிக்கை ஊட்டியவர்கள்.

ஆவணிப் பொன்னாளில் ரோகிணி நன்னாளில்

எல்லா உலகிற்கும் நாயகனாக விளங்கும் அருள்மிகு ராமபிரான் சீதா தேவியுடனும், லக்குமணருடனும் எழுந்தருளியுள்ள, மேலும், ருக்மணி சத்யபாமாவுடன் அருள்மிகு கிருஷ்ணர் குடிக் கொண்டுள்ள தலங்களில், சிறப்பு வாய்ந்த சென்னை நங்கநல்லூர் அருள்மிகு “ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் விஸ்வரூப தரிசனத்துடன்’’ எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தரும் இத்திருக்கோயில், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி உற்சவம் மற்றும் லட்சார்ச்சனை விழா நடைபெற இருக்கிறது.

ஸ்ரீவேணுகோபால சுவாமியின் கிருஷ்ண ஜெயந்தி உற்சவமானது, 30.08.2023 புதன் முதல் ஆரம்பித்து 7.9.2023 வியாழன் வரை நடைபெற உள்ளது. 4.9.2023 திங்கள் மாலை 6.15 மணிமுதல் யாகசாலா பூர்வாங்க பூஜை ஆரம்பமாகி, தொடர்ந்து ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி உற்சவம் 6.9.2023 புதன் அன்று இரவு 8.00 மணிக்கு ருக்மணி சத்யபாமா உடனுறை ஸ்ரீவேணுகோபால சுவாமிக்கு சிறப்பு நவகலச திருமஞ்சனமும், தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், பிறகு அன்று ஸ்ரீவேணுகோபால ஸ்வாமிக்கு லட்சார்ச்சனை நடைபெறும், அதனை தொடர்ந்து மஹா தீபாராதனை நடைபெறும். 7.09.2023 வியாழன் மாலை 7 மணியளவில் ருக்மணி சத்யபாமா உடனுறை ஸ்ரீவேணுகோபால சுவாமியின் சிறப்பு அலங்காரமும் மற்றும் திருவீதியுலா உற்சவமும் நடைபெறும்.

மேலும், 3.9.2023 ஞாயிறன்றுஅன்று காலை 9.30 மணிக்கு ருக்மணி சத்யபாமா உடனுறை ஸ்ரீவேணுகோபாலசுவாமியின் விஷே ஸமஷ்டி திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி லட்சார்ச்சனை உற்சவத்தில் அனைவரும் கலந்து கொண்டு, ருக்மணி சத்யபாமா உடனுறை ஸ்ரீவேணுகோபால சுவாமியின் அருள் பெற்று சீரும் சிறப்புமாய் வாழ வேண்டுகிறோம்.

தொகுப்பு: குடந்தை நடேசன்

The post பண்பாட்டு நாயகர் வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: