வினைகளை தீர்க்கும் விநாயகன்

முக்குறுணி விநாயகர்: குறுணி என்பது நெல் முதலிய தானியங்களை அளக்கும் அளவைகளில் ஒன்றான மரக்காலின் மும்மடங்கு ஆகும். முக்குறுணி என்பது ஒன்பது மரக்கால் அளவையைக் குறிக்கும். இங்கு முக்குறுணி விநாயகர் என்பது அளவால் பெரிய விநாயகரைக் குறிக்கிறது. மதுரை, திருவக்கரை, காஞ்சிபுரம், சிதம்பரம் முதலிய தலங்களில் அளவால் பெரிய விநாயகரைக் காண்கிறோம். இவர்கள் ஏறத்தாழ 8 அடி உயரம் உடையவர்கள். இவர்களுக்குப் பக்கவாட்டிலுள்ள படிகளில் ஏறியே அபிஷேகம் செய்ய வேண்டும்.

இவர்களின் உருவத்திற்கு ஏற்ப மோதகம் படைக்க வேண்டும் என்பதற்காக, முக்குறுணி அரிசியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மோதகத்தை (கொழுக்கட்டையை) படைக்கின்றனர். மதுரை முக்குறுணி விநாயகர் உலகப் புகழ் பெற்ற விநாயகராவார். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் தெற்கு கோபுரவாயில் இருந்து வருபவர்களுக்கு நேர் இருந்து அருள்பாலிக்கிறார். மீனாட்சியின் முன் மகா மண்டபத்தில் இருந்து மீனாட்சி அம்மனையும் இந்தப் பிள்ளையாரையும் ஒரே சேரத் தரிசிக்கலாம்.

திருக்கயிலாசப் பிள்ளையார்: அப்பரடிகள் திருவாய்மூர் சென்றபோது சிவபெருமான் தனது திருவோலக்க காட்சியைக் காட்டினார். அதில் அவருடன் தேவியும் விநாயகரும் வீற்றிருப்பதை அடிகளார் கண்டார். அதை மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன் என்று பாடிப் பரவினார். சிவபெருமானுக்கும் அம்பிக்கைக்கும் இடையில் விநாயகர் வீற்றிருக்கும் கோலம் `கஜமுகானுக்கிரகமூர்த்தி’ என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிற்பம் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் உள்ளது.

சங்கீத விநாயகர்: விநாயகர், இசை நாட்டியம் ஆகியவற்றினை எளிதில் அருளும் தெய்வமாக விளங்குகிறார். இசைக் கலைஞர்கள் அவரை வழிபட்டே தமது கலையைத் தொடங்குகின்றனர். இசைக் கலைக்குரியவராக விளங்கும் விநாயகரைச் சங்கீத விநாயகர் என்று போற்றுகின்றனர். விநாயகர் புல்லாங்குழல் வாசிக்கும் சிற்பம் பல இடங்களில் உள்ளன. ஜப்பானில் பல விதமான வாத்தியங்களை இசைத்து மகிழும் விநாயகர் சிற்பங்களை மகிழ்ச்சியுடன் போற்றுகின்றனர். அநேக இடங்களில் இதற்கு சங்கீத விநாயகர் உருவங்கள் அங்கே உள்ளன.

கோபுரவாசல் எதிர்கொள் கணபதி: சில தலங்களில் சுவாமிக்கு நேராக ராஜகோபுரம் அமையாது. சுவாமி கிழக்கு நோக்கி இருப்பார். ராஜகோபுரம் தென்புறம் தெற்கு நோக்கி இருக்கும். அந்தக் கோபுர வழியாக உட்செல்பவர்கள் முதலில் கண்டு வணங்கும் வகையில் உள்மதில் ஓரமாகத் தெற்கு நோக்கியவாறு சிறிய விநாயகர் சந்நதியை அமைந்திருப்பர். இவர் மிகுந்த சக்தி வாய்ந்தவராகப் போற்றப்படுகிறார். இத்தகைய சந்நதிகளில் சிதறுகாய் உடைத்தால் துன்பம் விரைவில் தொலையும். மயிலாப்பூர் கபாலீசுவரர் ஆலயத்தில் உள்ள நடன விநாயகர்.

திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் ஆலய தேவராஜகணபதி, திருமறைக்காடு வேதாரண்யேஸ்வரர் ஆலய வீரஹத்தி விநாயகர் முதலிய விநாயகர்கள் இவ்வாறு அமைந்த பக்த அனுக்கிரக விநாயகர்கள் ஆவர்.

கோடி விநாயகர்: கும்பகோணம் அருகே உள்ள கொட்டையூர் கோடி விநாயகர். இங்கு எல்லாமே கோடிதான். அதாவது கோடி விநாயகர், கோடீஸ்வரர், கோடி தீர்த்தம், கோடி விமானம், கோடி கோபுரம் என எல்லாமே கோடியில் இருக்கும். இத்தலத்திற்கு வந்து இந்த விநாயகரை வழிபட்டு, அதன் பின் மற்ற தெய்வங்களை வழிபட்டால் கோடிச் செல்வங்கள் பெறலாம் என்பது நம்பிக்கை.

அரச மரத்தடியில் அமர்ந்தது ஏன்?

விநாயகர் விக்கிரகங்கள் பெரும்பாலும், குளக்கரையின் அருகில் உள்ள அரச மரத்தடியில்தான் ஸ்தாபனம் செய்யப்பட்டிருக்கும். அரசமர நிழல் படர்ந்த நீரில் குளிப்பது, உடல்நலத்திற்கு நல்லது. பெண்கள் அரச மரத்தைச் சுற்றி வரும்போது கிடைக்கும் தூய பிராணவாயு, பெண்களின் கர்ப்பப்பை குறைபாடுகளை நீக்கக் கூடியது. எனவே கிராமங்களில் குளக்கரையில் அரச மரத்தடியில் பிள்ளையார் வைத்திருக்கிறார்கள்.

The post வினைகளை தீர்க்கும் விநாயகன் appeared first on Dinakaran.

Related Stories: