காவிரி விவகாரம் தொடர்பாக ஒன்றிய அமைச்சரை நாளை சந்திக்கிறது தமிழக எம்.பிக்கள் குழு: அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கோரிக்கை மனு வழங்கப்படவுள்ளது

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக எம்.பிக்கள் குழு ஒன்றிய அமைச்சரை நாளை சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்க உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், ஒரு சராசரி ஆண்டில் பில்லிகுண்டுலுவில் கர்நாடகா வழங்க வேண்டிய மாதாந்திர நீர் அளவின் கால அட்டவணையை நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி, இந்தாண்டுக்கான தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை கர்நாடக அரசு கடந்த செப்.14ம் தேதி 103.5 டி.எம்.சியில் 38.4 டி.எம்.சி. மட்டுமே கொடுத்திருந்தது.

மேலும், கர்நாடகா அரசு, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய பங்கை, விகிதாச்சாரப்படி கூட விடுவிக்காததாலும், உச்சநீதிமன்ற ஆணையின்படி ஏற்படுத்தப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றால் இதற்குத் தீர்வு காண முடியாததாலும், தமிழ்நாடு அரசு கடந்த ஆக.14ம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை வரும் 21ம் தேதி நீதிமன்றத்திற்கு வருகிறது. இந்தநிலையில், கர்நாடக அரசு ஒன்றிய ஜல் சக்தி அமைச்சருக்கு கடந்த செப்.13ம் தேதி எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் போதுமான மழை கிடைக்கும் எனவும், காவிரி டெல்டாவில் தேவையான அளவு நிலத்தடிநீர் இருக்கிறது எனவும் தவறான கருத்துக்களை தெரிவித்துள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் உண்மைக்கு புறம்பான அறிக்கைகளை ஒன்றிய அரசிடம் அளிக்கும் கர்நாடக அரசின் செயல்பாடுகள் குறித்தும், தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய நிர்ணயிக்கப்பட்ட நீரை திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்த கோரியும் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துகட்சி எம்.பிக்கள் குழு ஒன்றிய அமைச்சரை சந்தித்து மனு அளிப்பார்கள் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தார். அந்தவகையில், காவிரி விவகாரத்தில் ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சர் ஷெகாவத்தை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமயிலான அனைத்து எம்பிக்கள் குழு நாளை சந்திக்க உள்ளனர்.

இந்த சந்திப்பில், தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடக அரசு இதுவரை வழங்கவில்லை. எனவே, தமிழகத்திற்கு தற்போது விநாடிக்கு 12,500 கனஅடி நீரை கர்நாடகா விடுவித்திட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அறிவுறுத்த வேண்டும். காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு அளித்த உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்டுள்ள நீரை குறித்த காலத்தில் வழங்குமாறு கர்நாடகாவிற்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும். அதேபோல, முந்தைய மாதங்களில் நிலுவையில் இருக்கும் நீரை உடனடியாக வழங்க உத்தவிட வேண்டும்.

மேலும், கர்நாடக துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே அளித்த கடித்தத்தில் உண்மை தன்மை இல்லை. இந்த விவகாரத்தில் நேரடியாகவே ஒன்றிய ஆய்வு குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஆய்வு குழு சேர்ந்து கர்நாடக அணைகளில் நீரில் அளவை ஆய்வு செய்து பார்த்தாலே உண்மை தன்மை விளங்கும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கி மனுவை ஒன்றிய அமைச்சரிடம் அனைத்து எம்பிக்கள் குழு அளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post காவிரி விவகாரம் தொடர்பாக ஒன்றிய அமைச்சரை நாளை சந்திக்கிறது தமிழக எம்.பிக்கள் குழு: அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கோரிக்கை மனு வழங்கப்படவுள்ளது appeared first on Dinakaran.

Related Stories: