எண்ணூர் விரைவு சாலையில் வெடி மருந்துடன் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரியால் பரபரப்பு: துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிந்தனர்

திருவொற்றியூர், செப். 17: எண்ணூர் விரைவு சாலையில் வெடி மருந்துகள் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி திடீரென பழுதாகி நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் டோல்கேட் அருகே நேற்று அதிகாலை வழக்கம்போல் வாகனங்கள் சென்று வந்தன. அப்போது, அவ்வழியே சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றது. அடுத்த சில நிமிடங்களில் துப்பாக்கி ஏந்திய 6 போலீசார் அங்கு குவிந்தனர். லாரியின் முன்பும், பின்பும் தடுப்புகள் வைக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி விசாரித்தபோது அதிர்ச்சி தகவல் வெளியானது.

ஆந்திர மாநிலம், ஹரிகோட்டாவில் இருந்து வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய வெடி பொருட்களை 19 கன்டெய்னர் பெட்டிகளில் ஏற்றிக்கொண்டு டிரைலர் லாரிகள், மணலியில் உள்ள சரக்கு பெட்டகத்திற்கு வந்துள்ளன. அங்கு சோதனைக்கு பின் சீல் வைக்கப்பட்ட 19 கன்டெய்னர் பெட்டிகளை ஏற்றி வந்த லாரிகளும், நேற்று அதிகாலை துறைமுகத்திற்கு சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஒரு கன்டெய்னர் லாரியில் பழுது ஏற்பட்டு, நடுரோட்டில் நின்றது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு, கன்டெய்னர் லாரியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்தார். இதையடுத்து வெடிமருந்து இருந்த கன்டெய்னர் லாரி அங்கிருந்து மணலியில் உள்ள யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. சாலையில் வெகு நேரம் கன்டெய்னர் லாரியை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய தேசிய பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்கு நின்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post எண்ணூர் விரைவு சாலையில் வெடி மருந்துடன் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரியால் பரபரப்பு: துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: