சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரயில் போன்று வந்தே சாதாரண் ரயில்: சென்னை-காட்பாடிக்கு ஏசி ரயில்; ஐசிஎப் மேலாளர் மல்லையா தகவல்

சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வந்தே பாரத் பற்றிய ரைசிங் ஜர்னோ என்ற தலைப்பில் பத்திரிகை மாணவர்களுக்கான போட்டியின் லோகோவை ஐசிஎப் மேலாளர் மல்லையா வெளியிட்டார். இது குறித்து சென்னை ஐசிஎப் பொது மேலாளர் மல்லையா கூறியதாவது: வந்தே பாரத் ரயிலில் பயன்படுத்தப்படும் பொருட்களில் 87% இந்தியாவினுடையது. இதில், சக்கரம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. விரைவில் 100% மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்படும். மேலும், சென்னை ஐசிஎப்பில் சாதாரண மக்களும் பயணம் செய்யும் வகையில் ஏசி இல்லாத வந்தே பாரத் போன்ற ரயிலை தயாரித்து வருகிறோம். இது குறித்த வடிவமைப்பானது அக்டோபர் இறுதியில் தயாரிக்கப்பட்டு விடும்.

இதில் மொத்தம் 22 பெட்டிகள் இருக்கும், 22 பெட்டிகளிலும் குளிர்சாதன வசதி இருக்காது. இதில் முன்பதிவு இல்லாத பெட்டிகளும் இருக்கும். தற்போதுள்ள வந்தே பாரத் ரயிலில் இன்ஜின் ரயிலின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் குளிர்சாதன வசதி இல்லாமல் தயாரிக்கப்படும் இந்த ரயிலில் முன்னும் பின்னும் இன்ஜின் இருக்கும். அதே போல், இதற்கு அடுத்தபடியாக வந்தே மெட்ரோ ரயிலை தயாரிக்க இருக்கிறோம். இந்த ரயிலானது குறைந்தபட்ச தூரத்தில் இயக்கப்படும். அதாவது,சென்னை-செங்கல்பட்டு, சென்னை-காட்பாடி இது போன்று குறைவான தூரத்தில் இயக்கப்படும். இந்த வந்தேமெட்ரோவானது முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி கொண்ட ரயிலாக இருக்கும். இந்த ரயிலில் ஒரு பெட்டியில் 300 பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

The post சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரயில் போன்று வந்தே சாதாரண் ரயில்: சென்னை-காட்பாடிக்கு ஏசி ரயில்; ஐசிஎப் மேலாளர் மல்லையா தகவல் appeared first on Dinakaran.

Related Stories: