மீன் மார்க்கெட்டில் ரெய்டு ஈரோட்டில் கெட்டுபோன மீன்கள் வைத்திருந்த 4 கடைகளுக்கு அபராதம்

ஈரோடு,செப்.16: ஈரோடு மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் நடத்திய ரெய்டில் 4 கடைகளில் கெட்டுபோன மீன்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. தமிழக அரசின் உணவு பாதுகாப்புதுறை ஆணையம் மற்றும் மீன்வளம், மீனவர் நலத்துறை ஆணையகம் இணைந்து மீன்மார்க்கெட்டுகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வன், அருண்குமார், மீன்வளத்துறை ஆய்வாளர் சசிகலா, உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் மீன் மார்க்கெட்டில் உள்ள 20க்கும் மேற்பட்ட மீன்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது 4 கடைகளில் கெட்டுப்போன மீன் வகைகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக இருப்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கெட்டுப்போன நிலையில் இருந்த 12 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து முறைப்படி மருந்து தெளித்து அழித்தனர். மேலும் சம்மந்தப்பட்ட 4 கடைகளுக்கு தலா ரூ.1000 அபராதம் விதித்தனர். இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்கவிக்னேஷ் கூறுகையில், மீன்களை சுகாதாரமான முறையில் சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல் இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்படக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் உணவு பொருட்கள் குறித்த புகார்களுக்கு 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

The post மீன் மார்க்கெட்டில் ரெய்டு ஈரோட்டில் கெட்டுபோன மீன்கள் வைத்திருந்த 4 கடைகளுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: