தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி சனாதன எதிர்ப்பு பேரணி: 2000 பேர் பங்கேற்க முடிவு

ஈரோடு,செப்.16: தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் சனாதன எதிர்ப்பு பேரணி நாளை 17ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்க உள்ளனர்.
தந்தை பெரியாரின் 145வது பிறந்த நாள் விழாவையொட்டி சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் ஈரோட்டில் சனாதன எதிர்ப்பு பேரணி நாளை (17ம் தேதி) நடைபெற உள்ளது. ஈரோடு கலெக்டர் அலுவலகம் அருகில் இருந்து தொடங்க உள்ள இப்பேரணியானது பெருந்துறை ரோடு,பிரப் ரோடு வழியாக பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. முன்னதாக பன்னீர்செல்வம் பார்க்கில் சமூக நீதி உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

பேரணியில் பெரியார் வேடமணிந்தும், சமூக நீதியை வலியுறுத்தும் வகையிலான பதாதைகள் ஏந்திக்கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. பேரணியை ஈரோடு எம்பி கணேசமூர்த்தி தொடங்கி வைக்கிறார். பேரணியில் சமூக நீதி கூட்டமைப்பில் உள்ள திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, தமிழ்புலிகள் கட்சி, திராவிடர் கழகம், திராவிடர் தமிழர் பேரவை, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், ஆதித்தமிழர் பேரவை, முஸ்லீம் அமைப்புகள், திராவிட இயக்கங்கள், விவசாய அமைப்புகள், வணிக சங்கங்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக நீதிக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி தெரிவித்துள்ளார்.

The post தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி சனாதன எதிர்ப்பு பேரணி: 2000 பேர் பங்கேற்க முடிவு appeared first on Dinakaran.

Related Stories: