பேரள்ளி கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம்?

போச்சம்பள்ளி, செப்.14: காவேரிப்பட்டணம் ஒன்றியம், பேரள்ளி கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் ்இருப்பதாக வந்த தகவலையடுத்து, கிராமத்தில் முகாமிட்டுள்ள வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரள்ளி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள இந்த கிராமத்தில், விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கிராமத்தில் குன்றுகள் அதிக அளவில் உள்ளதால், அடிக்கடி மலைப்பாம்புகள் ஊருக்குள் புகுந்து விடுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக பேரள்ளி கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஊராட்சி தலைவர் உமா பாரத்சரவணன், கிருஷ்ணகிரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், பேரள்ளி கிராமத்தில் முகாமிட்டு, அப்பகுதியில் பதிவாகி இருந்த விலங்கின் கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.மேலும், கிராம மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். விவசாய நிலங்களுக்கு தனியாக செல்ல வேண்டாம். அதிகாலை நேரத்தில் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சவோ, வழித்தடத்தில் தனியாக செல்லவோ வேண்டாம் எனவும், மர்ம விலங்கை பார்த்தால், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர். சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியுள்ளதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

The post பேரள்ளி கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம்? appeared first on Dinakaran.

Related Stories: