சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது: மாடு திருடியவர் 58 ஆண்டுக்கு பின் கைது

பெங்களூரு: கடந்த 58 ஆண்டுகளுக்கு முன் எருமை ஒன்றை திருடிய வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். மாநிலத்தின் பீதர் மாவட்டம், உம்னாபாத் தாலுகா, மெகஹர் கிராமத்தில் கடந்த 1965 ஏப்ரல் 25ம் தேதி தனக்கு சொந்தமான 2 எருமை, 1 பசு காணாமல் போய் விட்டதாகவும், அதை மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த கிஷன் சந்தர் (30) மற்றும் கணபதி விட்டல வாக்மோரே (22) ஆகியோர் திருடி சென்றதாகவும் மெகஹர் போலீஸ் நிலையத்தில் முரளிதரராவ் மாணிக்கராவ் குல்கர்னி என்பவர் புகார் கொடுத்தார். அதை பதிவு செய்த போலீசார், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ததுடன் இருவரையும் கைது செய்தனர். பின் இருவரும் பீதர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது.ஜாமீனில் விடுதலையான இருவரும் நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினர்.

இதனிடையில் பீதர் மாவட்ட புதிய போலீஸ் எஸ்பியாக பொறுப்பேற்ற எஸ்.எல்.சென்னபசவண்ணா, லாங்க் பென்டிங் ரிகார்ட்டில் சேர்க்கப்பட்ட கால்நடை திருட்டு வழக்கிற்கு உயிர் கொடுக்க தொடங்கினார். குற்றவாளிகள் எந்த காரணம் கொண்டும் சட்டத்தின் தண்டனையில் இருந்து தப்பிக்ககூடாது என்பதில் உறுதியாக இருக்கும் போலீஸ் எஸ்.பி. தலைமறைவாக இருந்த கணபதி விட்டல் வாக்மோரேவை கைது செய்ய நடவடிக்கை எடுத்தார். தனிப்படை போலீசார் மகாராஷ்டிரா மாநிலம் சென்று, அம்மாநில போலீசாரின் ஒத்துழைப்பில் லாதூர் அருகில் உள்ள டாகளங்காவ் என்ற கிராமத்தில் இருந்த கணபதி விட்டல் வாக்மோரே (80)வை கைது செய்து பீதர் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சுமார் 58 ஆண்டுகாலத்துக்கு பின் போலீசார் கைது செய்திருப்பதின் மூலம் சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது என்பதை நிரூபித்துள்ளனர்.

The post சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது: மாடு திருடியவர் 58 ஆண்டுக்கு பின் கைது appeared first on Dinakaran.

Related Stories: