சட்டப்பேரவை தேர்தலில் சீட் வாங்கி தருவதாக தொழிலதிபரிடம் ரூ.5 கோடி மோசடி செய்த கர்நாடக பாஜ பெண் பிரமுகர் கைது

பெங்களூரு: கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாபூர் பகுதியை சேர்ந்தவர் சைத்ரா குந்தாபூர். இவர் பஜ்ரங்தள், ஆர் எஸ் எஸ் அமைப்புகளில் மட்டுமில்லாமல் பாஜவிலும் முக்கிய பொறுப்பில் உள்ளார். கட்சியில் மிக தீவிரமாக செயல்பட்டு வந்தது மட்டுமின்றி அனைத்து மேடைகளில் மாற்று மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இவரது வழக்கம்.பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் கோவிந்த்பாபு பூஜாரி வரலட்சுமி என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை உருவாக்கி சமூக பணி செய்து வருகிறார். இவருக்கு பாஜவை சேர்ந்த பிரசாத் பைந்தூர் மூலம் சைத்ரா குந்தாபூர் அறிமுகம் கிடைத்துள்ளது. அப்போது தான் பிரதமர் அலுவலகத்தில் தொடர்பில் இருப்பதாகவும், உங்களுக்கு கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட சீட்டு வாங்கித் தருவதாக உறுதி அளித்துள்ளார்.

இதையடுத்து சீட் உறுதி செய்ய சிக்கமகளூரு நகரில் உள்ள மூத்த ஆர் எஸ் எஸ் தலைவர் விஸ்வநாத் என்பவரிடம் சைத்ரா தொழிலதிபரை அழைத்து சென்றுள்ளார். அப்போது விஸ்வநாத் உடனடியாக ரூ.50 லட்சம் பணமும் அதன் பிறகு ரூ.3 கோடி ரூபாயும் வழங்க வேண்டும் பணம் கொடுப்பவருக்கே தேர்தலில் பாஜ போட்டியிட சீட்டு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரூ.5 கோடி வரை பணத்தை வழங்கி உள்ளார். தேர்தல் நெருங்கி வந்த நிலையில் ஆர் எஸ் எஸ் தலைவர் விஸ்வநாத் இமயமலையில் பயணம் செய்த போது இறந்து விட்டதாக சைத்ரா தெரிவித்துள்ளார்.

சந்தேகம் அடைந்த தொழிலதிபர் ஆர்.எஸ்.எஸ் நண்பர்களுடன் விசாரித்த போது விஸ்வநாத் என்ற பெயரில் ஆர் எஸ் எஸ்சில் முக்கிய பொறுப்பில் யாரும் கிடையாது என்பது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டது குறித்து அறிந்துகொண்ட தொழிலதிபர் சைத்ராவிடம் கேட்ட போது அவரை குண்டர்களை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டினார். மேலும் தனக்கு நெருக்கமாக உள்ள நீதிபதிகளிடம் கூறி சிறையில் அடைத்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.இதையடுத்து பெங்களூருவில் உள்ள பண்டேபாளையா போலீஸ் நிலையத்தில் தொழிலதிபர் புகார் அளித்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உடுப்பியில்‌ வைத்து சைத்ரா குந்தாபூரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். அவருடன் மோசடியில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

The post சட்டப்பேரவை தேர்தலில் சீட் வாங்கி தருவதாக தொழிலதிபரிடம் ரூ.5 கோடி மோசடி செய்த கர்நாடக பாஜ பெண் பிரமுகர் கைது appeared first on Dinakaran.

Related Stories: