நியூசி.யுடன் 3வது ஒருநாள்: 182 ரன் விளாசினார் பென் ஸ்டோக்ஸ்

லண்டன்: நியூசிலாந்து அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக 182 ரன் விளாசி அசத்தினார். கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான் இணைந்து இங்கிலாந்து இன்னிங்சை தொடங்கினர். போல்ட் வீசிய முதல் பந்திலேயே பேர்ஸ்டோ கோல்டன் டக் அவுட்டாகி வெளியேற, இங்கிலாந்துக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து வந்த ஜோ ரூட் 4 ரன் மட்டுமே எடுத்து போல்ட் வேகத்தில் கிளீன் போல்டாக, இங்கிலாந்து 2.4 ஓவரில் 13 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், மலான் – பென் ஸ்டோக்ஸ் இணைந்து நியூசிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தனர். ஸ்டோக்ஸ் சதம் அடிக்க, இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 199 ரன் சேர்த்து மிரட்டியது. மலான் 96 ரன் (95 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி போல்ட் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் லாதம் வசம் பிடிபட்டார். கேப்டன் பட்லர் 38 ரன், லிவிங்ஸ்டன் 11 ரன்னில் வெளியேற, ஸ்டோக்ஸ் 182 ரன் (124 பந்து, 15 பவுண்டரி, 9 சிக்சர்) விளாசி லிஸ்டர் பந்துவீச்சில் யங் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுக்க, இங்கிலாந்து 48.1 ஓவரில் 368 ரன் குவித்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து பந்துவீச்சில் போல்ட் 9.1 ஓவரில் 51 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். பென் லிஸ்டர் 3, பெர்குசன், பிலிப்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். உலக கோப்பை நெருங்கும் நிலையில், பென் ஸ்டோக்சின் அதிரடி ஆட்டம் மற்ற அணிகளுக்கு எச்சரிக்கை மணியாக ஒலிக்கிறது.

The post நியூசி.யுடன் 3வது ஒருநாள்: 182 ரன் விளாசினார் பென் ஸ்டோக்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: