இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை சில நாள் சாரல் மழையாக மட்டுமே பெய்தது. இதனால் கோதையாறு ஓடையாக மாறியது. சுட்டெரிக்கும் வெயிலால் கோதையாற்றில் தண்ணீர் பாய்ந்து செல்லும் பரப்பு பாறையாகவும், கட்டாந்தரையாகவும் காட்சியளிக்கிறது. தற்போது கோதையாறு சிறிய நீரோடையாக மாறிவிட்டதால் திற்பரப்பு அருவியில் மிக குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் முதல் தொடர்ச்சியாக குமரி முழுவதும் சாரல் மழை நீடித்து வருகிறது.
மலை மற்றும் மலையோர பகுதிகளில் கனமழை, சாரல் மழை என்று அவ்வப்போது பெய்து வருகிறது. இதனால் தண்ணீர் வருகை சற்று அதிகரித்தது உள்ளது. ஆகவே தண்ணீர் மிக குறைந்து பாறையாக காட்சி அளித்த திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிகரித்து அருவியின் எல்லா பகுதிகளிலும் தண்ணீர் விழுகிறது. சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் வெயில் சிறிதுமின்றி குளு குளு சீசன் நிலவி வருகிறது. சாரல் மழையுடன் அவ்வப்போது இதமான தென்றல் வீசுவது பயணிகளுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.
The post திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம் appeared first on Dinakaran.
