ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி திருப்பதியில் 5 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தம்: கோயிலில் மூலிகை கலவை தெளிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி நேற்று 5 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டு, கோயில் முழுவதும் மூலிகை கலவை தெளிக்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கு வருடப்பிறப்பு, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமைகளில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மை பணி) நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான வருடாந்திர பிரமோற்சவம் வரும் 18ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனையொட்டி நேற்று நித்யபூஜைகளுக்கு பிறகு கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் தலைமையில் நடந்தது. கருவறையில் மூலவரை பட்டு துணியில் மூடிய பின்னர் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, பச்சைக்கற்பூரம், கிச்சிலிக்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், திருச்சூர்ணம் உள்ளிட்ட மூலிகை கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது.

இதில், செயல் அதிகாரி தர்மா, துணை செயல் அதிகாரி லோகநாதம், முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்மகிஷோர் உள்ளிட்ட அதிகாரிகள் ஊழியர்கள் பங்கேற்றனர். இதனால், நேற்று காலை 6 மணி முதல் 11 மணி வரை 5 மணிநேரத்துக்கு பக்தர்களுக்கான தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து 11 மணிக்கு பிறகு இலவச தரிசன வரிசை, ரூ.300 டிக்கெட் வரிசையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

The post ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி திருப்பதியில் 5 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தம்: கோயிலில் மூலிகை கலவை தெளிப்பு appeared first on Dinakaran.

Related Stories: