பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியானது விரைவில் இந்தியாவுடன் இணையும்: ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் நம்பிக்கை

ஜெய்ப்பூர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியானது விரைவில் இந்தியாவுடன் இணையும் என்று ஒன்றிய அமைச்சரும், முன்னாள் ராணுவத் தளபதியுமான வி.கே.சிங் கூறினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அடுத்த தவுசாவில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின்னர், ஒன்றிய அமைச்சரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான வி.கே.சிங் கூறுகையில், ‘இந்தியா – பாகிஸ்தானின் முக்கிய எல்லையான கார்கில் எல்லையை திறக்கக் கோரி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் ஷியா பிரிவு முஸ்லீம்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவ்விவகாரத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், விரைவில் இந்தியாவுடன் தானாக இணையும்.

இந்தியாவில் பேன்ட், ஷர்ட் அணிந்து கொண்டும், வெளிநாடு செல்லும்போது குர்தா, பைஜாமா அணிந்து செல்பவரை (ராகுல்காந்தி) குறித்து கேட்கிறீர்கள். அவரை பற்றி என்ன சொல்ல முடியும்? கைலாஷ் மானசரோவர் யாத்திரையைத் தொடங்கும் முன், அவர் புனித நூலைப் போட்டுக் கொண்டார். கோயிலுக்குச் சென்று திரும்பிய பின்னர் இறைச்சி சாப்பிட்டார். மதம் குறித்த புரிதல் இல்லாதவர்களில் இவரும் ஒருவர். பிரதமர் மோடி, பணக்காரர்களுக்காக சேவை செய்கிறார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியுள்ளார். அவரது பேச்சு குழந்தைத்தனமாக உள்ளது’ என்று கூறினார்.

The post பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியானது விரைவில் இந்தியாவுடன் இணையும்: ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் நம்பிக்கை appeared first on Dinakaran.

Related Stories: