வங்கதேச பிரிமியர் லீக்கில் இருந்து இந்திய பெண் வர்ணனையாளர் விலகல்: எனக்கு தேசமே முதன்மையானது என பதிவு

மும்பை: இருநாடுகளிடையே ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றம் காரணமாக வங்கதேச பிரிமியர் லீக்கில் இருந்த இந்திய பெண் வர்ணனையாளர் விலகி உள்ளார். எனக்கு தேசமே முதன்மையானது என அவர் பதிவிட்டுள்ளார்.

வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீது தாக்குதலால் இந்தியா-வங்கதேசம் இடையே அரசியல் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிசிசிஐ அறிவுறுத்தல்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதனால் கோபமடைந்த வங்கதேசம், தங்கள் நாட்டில் ஐபிஎல் ஒளிபரப்ப தடைவிதித்துள்ளது. மேலும் அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக கோப்பை தொடரில் பங்கேற்க அணியை அனுப்ப முடியாது, தங்கள் போட்டிகளை பாகிஸ்தானை போன்று இலங்கைக்கு மாற்ற வேண்டும் என ஐசிசியிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதனால் பிசிசிஐ-பிசிபி (வங்கதேச கிரிக்கெட் வாரியம்) இடையே மோதல் மேலும் வலுத்துள்ளது.

இந்நிலையில் வங்கதேச பிரிமியர் லீக்கில் (பிபிஎல் டி20) வர்ணணையாளராக பணியாற்றி வந்த இந்தியாவை சேர்ந்த ரித்திமா பதக் (35), நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. பிபிஎல் டி20 தொடரில், பாகிஸ்தான் தொகுப்பாளினி ஜைனப் அப்பாசுடன் இணைந்து ரித்திமா பதக் போட்டிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

இந்நிலையில் அந்த தொடரிலிருந்து வெளியேறியது, அவர் நீக்கப்பட்டதாக பேசப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனது சமூக வலைதள பக்கத்தில் ரித்திமா பதக் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
உண்மை முக்கியம். கடந்த சில மணி நேரங்களாக, பிபிஎல் தொடரிலிருந்து நான் ‘நீக்கப்பட்டதாக’ ஒரு கதை பரப்பப்பட்டு வருகிறது. அது முற்றிலும் பொய்யானது. அந்த தொடரிலிருந்து விலகுவது என்பது நானாக எடுத்த தனிப்பட்ட முடிவு. எனக்கு எப்போதும் என் தேசமே முதன்மையானது. எந்த ஒரு தனிப்பட்ட பணி நியமனத்தையும் விட, கிரிக்கெட் விளையாட்டை நான் உயர்வாக மதிக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக நான் நேர்மையுடனும், மரியாதையுடனும், அர்ப்பணிப்புடனும் கிரிக்கெட்டிற்காக பணியாற்றியுள்ளேன். அது என்றும் மாறாது. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. கிரிக்கெட்டிற்கு தேவை உண்மை மட்டுமே. இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையிலான பனிப்போர் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்த சூழலில் இந்திய தொகுப்பாளினியின் இந்த துணிச்சலான முடிவு இந்திய ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: