நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்குமா?

மேட்டூர், செப்.12: மேட்டூர் அணை பாசனம் மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை 230 நாட்களுக்கு 330 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். பாசனப்பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து பாசன தேவை குறையும். குறுவை சாகுபடிக்கு ஜூன் 12 முதல் செப்டம்பர் 15 வரை 125 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும். நடப்பு ஆண்டில் 5.25 லட்சம் ஏக்கரில் குறுவை பயிரிடப்பட்டுள்ளது. நேற்று வரை குறுவை சாகுபடிக்கு 75 டிஎம்சி தண்ணீர் மட்டுமே மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ளது. மேலும் 50 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும்.

ஆனால் மேட்டூர் அணை நீர் இருப்பு 15.32 டிஎம்சி மட்டுமே உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 2,266 கன அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கனஅடி வீதம் தண்ணீர்
திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் நீர் இருப்பும் வேகமாக சரிந்து வருகிறது. குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா என்ற அச்சம் காவிரி டெல்டா விவசாயிகள் இடையே ஏற்பட்டுள்ளது.

நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் திங்கட்கிழமை வரை கர்நாடகம் தமிழகத்திற்கு 98 டிஎம்சி தண்ணீர் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் 37 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கி உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இன்னும் 61 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். கர்நாடக அணைகளின் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்த போதிலும் தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்க மறுத்து வருகிறது. இதனால் காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

The post நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்குமா? appeared first on Dinakaran.

Related Stories: