ரூ.50 கோடி கோயில் நிலம் மோசடி பாஜ எம்எல்ஏ மீது நடவடிக்கை? அரசு அதிகாரிகள் 2 பேரை காவலில் விசாரிக்க சிபிசிஐடி மனு

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.50 கோடி கோயில் நில மோசடி வழக்கில் கைதான 2 அரசு அதிகாரிகளை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் மனு செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணைக்குப்பின் மோசடியில் தொடர்புடையதாக கூறப்படும் பாஜ எம்எல்ஏ ஜானகிராமன் மீதும் நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது. புதுச்சேரி பாரதி வீதியில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமாக ரெயின்போ நகரில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான 64 ஆயிரம் சதுர அடி நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்ததாக பாஜ எம்எல்ஏ ஜான்குமார், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்பட பலர் மீது புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்து போலி பத்திரத்தை பதிவு செய்த சென்னை தம்பதி, சார் பதிவாளர் சிவசாமி உட்பட 15 பேரை கைது செய்தனர்.

இதை தொடர்ந்து, புதுச்சேரியைச் சேர்ந்த வி.வேல்முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கோயில் நிலத்தை விற்பனை செய்ததில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் தற்போதைய பாஜ எம்எல்ஏ ஜான்குமார் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் விசாரித்து, ஜான்குமார் எம்எல்ஏ மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து புதுச்சேரி காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்றால் விசாரணை சிபிஐக்கு மாற்றப்படும் எனக்கூறியிருந்தார்.

இந்த நிலையில் மோசடி வழக்கில் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் செட்டில்மென்ட் அதிகாரியாகவும், தற்போது மீன்வளத்துறை இயக்குநராகவும் இருந்த பாலாஜி, அப்போதைய நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையின் இயக்குநர் ரமேஷ் ஆகியோரும் சேர்க்கப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக கடந்த 29ம் தேதி சென்னை கோயம்பேட்டில் பாலாஜியை போலீசார் கைது செய்தனர். அதிகாரி ரமேஷ், கடந்த 2ம் தேதி சிபிசிஐடி போலீசாரிடம் சரண் அடைந்தார். இவ்வழக்கில் இவர்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நோட்டரி வழக்கறிஞரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் காமாட்சியம்மன் கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாக கூடுதல் தகவல்களை பெறுவதற்காக 2 அதிகாரிகளையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் புதுச்சேரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இம்மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. 2 அதிகாரிகளும் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையில் சிபிசிஐடி இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இம்மோசடியில் தொடர்புடையதாக கூறப்படும் பாஜ எம்எல்ஏ ஜான்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

The post ரூ.50 கோடி கோயில் நிலம் மோசடி பாஜ எம்எல்ஏ மீது நடவடிக்கை? அரசு அதிகாரிகள் 2 பேரை காவலில் விசாரிக்க சிபிசிஐடி மனு appeared first on Dinakaran.

Related Stories: