இதனிடையே நேற்று சேலம் வந்த தனபால் நிருபர்களிடம் கூறியதாவது:
சிபிசிஐடி போலீசார் எப்போது சம்மன் கொடுத்தாலும் நான் செல்ல தயாராக உள்ளேன். இந்த வழக்கு தொடர்பாக எனது தம்பி கனகராஜ் என்னிடம் கூறிய அனைத்து உண்மைகளையும் வாக்குமூலமாக அளிக்கத் தயாராக உள்ளேன். இந்த சம்பவத்தில் எனது தம்பி ஈடுபட எனது உறவினர்கள் 3 பேரே அவரை மூளை சலவை செய்துள்ளனர். அதில், சசிகலா குறித்து மிக தரக்குறைவாக பேசியும், அவருடன் இருந்து என்ன சம்பாதித்தாய் என கேட்டும், நல்ல முறையில் உன்னை வாழ வைக்கிறேன் என கூறியும் இந்த சம்பவத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.
முன்னாள் முதல்வர், 2 முன்னாள் அமைச்சர்கள் என முக்கிய நபர்கள் 5 பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளது. என் தம்பியிடம் ₹25 கோடி பேரம் பேசி இந்த சம்பவத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். கொடநாட்டில் இருந்து 5 பைகளில் ஆவணங்களை எடுத்து வந்த நிலையில், சங்ககிரி மற்றும் சேலத்தில் வைத்து பெற்றுக்கொண்டனர். ஆனால் பேரம் பேசியபடி பணத்தை கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்னையில், எனது தம்பியை கடுமையாக தாக்கினர். இது எல்லாம் அவர் விபத்தில் சிக்கிய வாரத்தில், செவ்வாய்க்கிழமையன்று நடந்தது.
அடுத்த 2 நாட்கள் இடைப்பாடி, அயோத்தியாப்பட்டினத்தில் வைத்து எனது தம்பி சிலருடன் சேர்ந்து மது குடித்துள்ளான். பின்னர் வெள்ளிக்கிழமை விபத்தில் மர்மமாக இறந்து விட்டான். இந்த கொள்ளை நடத்தப்பட்டதே, முன்னாள் அமைச்சர்கள் தொடர்பாக பல்வேறு ஆவணங்களை கொடநாடு பங்களாவில் இருந்து எடுப்பதற்காகத்தான். அந்த ஆவணங்களை கைப்பற்றப்பட்ட பின்னர்தான், எடப்பாடி பழனிசாமி கட்சியை தன்வசப்படுத்தி இருக்கிறார். அதனால் அங்கு கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்கள், நிர்வாகிகளிடம் இன்னும் இருக்கிறது.ஏற்கனவே என்னிடம் விசாரித்தபோது இதையெல்லாம் கூற முடியாத நிலையில் இருந்தேன். தற்போது சிபிசிஐடி விசாரணையில் அனைத்து உண்மைகளையும் தெரிவிக்க உள்ளேன்.
சிபிசிஐடி அதிகாரி விசாரித்தாலோ அல்லது தனியறையில் நீதிபதி கேட்டாலோ சொல்ல தயாராக இருக்கிறேன். இதையெல்லாம் தற்போது ஏன் சொல்கிறேன் என்றால், அதிமுகவின் மிகப்பெரிய தலைவியாக இருந்த ஜெயலலிதாவின் பங்களாவில் தப்பு செய்தது என் தம்பியாக இருந்தாலும், தண்டிக்கப்பட வேண்டும். அங்கு நடந்தவை அனைத்தையும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் போலீஸ் கண்காணிப்பிலேயே இருக்கிறேன். இவ்வாறு தனபால் கூறினார்.
The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக மாஜி அமைச்சர்கள் இரண்டு பேருக்கு தொடர்பு: ஜெ., கார் டிரைவரின் அண்ணன் புதிய தகவல் appeared first on Dinakaran.
