ஓசூரில் 21 பட்டாசு கடைகளின் உரிமம் ரத்து

ஓசூர், செப்.5: ஓசூரில், உரிய பாதுகாப்பின்றி இயங்கிய 21 பட்டாசு கடைகளின் உரிமம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி பழைய பேட்டையில், கடந்த ஜூலை மாதம் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிய பாதுகாப்பு மற்றும் அனுமதியின்றி இயங்கி வரும் பட்டாசு கடைகளை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் தனி குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, அக்குழு காவல்துறையுடன் இணைந்து, மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்தது.

இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 48 கடைகள் அனுமதியின்றியும், உரிய பாதுகாப்பின்றியும் இயங்கியது தெரிய வந்தது. அதேபோல், ஓசூர் மற்றும் சூளகிரி பகுதியில் குடியிருப்புகள், மசூதி, கோயில்கள், பள்ளிகள் அருகே உரிய பாதுகாப்பின்றி இயங்கி வந்த 21 பட்டாசு கடைகள் கண்டறியப்பட்டு, அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. மேலும், தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பட்டாசு கடைகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து, காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

The post ஓசூரில் 21 பட்டாசு கடைகளின் உரிமம் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: