சென்னை விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் தானியங்கி மழைமானி வானிலை நிலையம்: விஐடி துணை தலைவர் திறந்து வைத்தார்

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டத்தில் வானிலை கண்காணிப்பு வலையமைப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கையாக, இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை விஐடி இணைந்து, சென்னை விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் தானியங்கி மழைமானி அமைப்பு மற்றும் தானியங்கி வானிலை நிலையத்தை நிறுவியது. இந்த நிலையத்தை விஐடி துணை தலைவர் சேகர் விசுவநாதன் நேற்று திறந்து வைத்தார். அப்போது, சென்னை விஐடி இணை துணை வேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், விஐடி வேந்தரின் ஆலோசகர் தியாகராஜன், கூடுதல் பதிவாளர் மனோகரன், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் டீன் இரா.கணேசன், ஜப்பான் நாட்டை சேர்ந்த ரைகொகு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மோரிகி ஒஹாரா மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அப்போது, மண்டல வானிலை மைய தலைவர் பாலசந்திரன் கூறுகையில், ‘சென்னை விஐடியில் நிறுவியுள்ள கண்காணிப்பு நிலையம் வானிலை தகவல்கள் மற்றும் முன் அறிவிப்புகளை வழங்கும். காற்றின் வெப்பநிலை, ஈரப்பதம், மழைப்பொழிவு, காற்றின் வேகம், காற்றின் திசை மற்றும் அழுத்தம் ஆகியவற்றை அளவிடுவதற்கு கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும், மழைப்பொழிவு அளவு மற்றும் தீவிரத்தை அளவிடுவதற்கான புதிய கருவிகள், சென்சார்களின் முன்மாதிரி பொருத்தப்பட்டுள்ளது.

மிசோநெட் (Mesonet) திட்டத்தின் மூலம் நகர கண்காணிப்பு வானிலை வலையமைப்பை விரிவுபடுத்தும் முயற்சியாகும். மேலும், வானிலை ஆராய்ச்சிக்கு இந்த புதிய முயற்சி பேருவுதவியாக இருக்கும்’ என்றார்.இந்திய வானிலை மண்டல ஆய்வு மையத்தின் விஞ்ஞானி மீனாட்சி நாதன், சென்னை விஐடி கணிணி மற்றும் பொறியியல் அறிவியல் துறை பேராசிரியர் பார்வதி, முனைவர் பட்டாபிராமன், முனைவர் விஜயலட்சுமி ஆகியோர், சென்னை விஐடி வளாகத்தில் கண்காணிப்பு வலையமைப்பை அமைப்பதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர். புதிதாக அமைக்கப்பட்டுள்ள வானிலை வலையமைப்பு நிலையத்தின் மூலம் மாணவர்கள் புதிய ஆராய்ச்சி திட்டங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பு உருவாக்கி தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post சென்னை விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் தானியங்கி மழைமானி வானிலை நிலையம்: விஐடி துணை தலைவர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: