ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு பணிகளை துவங்கியது ராம்நாத் கோவிந்த் குழு: உறுப்பினர் பதவியை ஏற்க ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மறுப்பு

புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர் மட்டக்குழு தனது பணிகளை துவங்கியுள்ளது. அதே நேரத்தில் அந்த குழுவின் உறுப்பினர் பதவியை ஏற்க மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மறுப்பு தெரிவித்துள்ளார்.  மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை கண்டு அஞ்சுவதால் மக்களவை தேர்தலை முன்கூட்டியே வரும் டிசம்பர் மாதம் நடத்த திட்டமிடுவதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் குற்றம் சாட்டியிருந்தனர்.

இதனிடையே, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை வரும் 18ம் தேதி முதல் 22 வரை நடத்த இருப்பதாக ஒன்றிய பாஜ அரசு கடந்த வாரம் திடீரென அறிவித்தது. இந்த சிறப்பு கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் கீழ் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள், மாநில சட்டப்பேரவைகள், மக்களவைக்கு தேர்தல் நடத்துவது குறித்த மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதே நேரத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வருவது குறித்த சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்மட்ட சிறப்பு குழுவை நியமித்துள்ளது.

இந்த குழுவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத், முன்னாள் நிதி கமிஷன் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் தலைமை செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வே மற்றும் முன்னாள் ஊழல் தடுப்பு துறை ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குழுவின் செயலாளராக ஒன்றிய சட்டத்துறை செயலாளர் நிதன் சந்திரா இருப்பார். இந்த குழுவில் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே சேர்க்கப்படாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உயர்மட்ட குழுவில் சேருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர் மட்டக் குழு நேற்று தனது பூர்வாங்க பணிகளை துவங்கி உள்ளது. இதற்காக ராம்நாத் கோவிந்த்தை டெல்லியில் நேற்று ஒன்றிய சட்டத் துறை அதிகாரிகள் சந்தித்தனர்.

உயர்மட்ட குழுவின் செயலாளராக உள்ள ஒன்றிய சட்டத்துறை செயலாளர் நிதன் சந்திரா மற்றும் தேர்தல் தொடர்பான சட்ட விவகாரங்களை கவனிக்கும் செயலாளர் ரீட்டா வசிஸ்டா உள்ளிட்ட அதிகாரிகள் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்தனர். அப்போது, ஒரே நாடு ஒரே தேர்தலை திட்டப்படி தேர்தலை நடத்துவதற்கேற்ப அரசியலமைப்பு சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் இதர சட்டங்கள் மற்றும் விதிகளில் திருத்தங்களை மேற்கொள்வது எப்படி என்பது பற்றி ராம்நாத் கோவிந்த்துக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். விரைவில் உயர்மட்டக் குழுவின் கூட்டம் நடைபெறும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

The post ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு பணிகளை துவங்கியது ராம்நாத் கோவிந்த் குழு: உறுப்பினர் பதவியை ஏற்க ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: