பிரசார வாகனம் மூலம் விழிப்புணர்வு குறும்படம்

கிருஷ்ணகிரி, செப்.3: தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுவதையொட்டி, எல்இடி பிரசார வாகனம் மூலம் விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பு மற்றும் இருசக்கர வாகன பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதி துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் முதன்மை மாவட்ட நீதிபதி சுமதிசாய் பிரியா, தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுவதையொட்டி, எல்இடி பிரசார வாகனம் மூலம் விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பு மற்றும் இருசக்கர வாகன பேரணியை, கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, விழிப்புணர்வு குறும்படத்தை பார்வையிட்டார்.

இது குறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் முதன்மை மாவட்ட நீதிபதி கூறியதாவது: தங்களுக்கோ அல்லது தங்கள் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்தால், அப்படிப்பட்ட வழக்குகளுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கத்துடன், கிருஷ்ணகிரி தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 9ம் தேதி நடைபெறவுள்ளது. பொதுமக்கள் மற்றும் வழக்காளர்கள் மக்கள் நீதிமன்றத்தில், நீதிபதிகள் முன்பு தங்கள் வழங்குகளை சமரசம் வழியாக நிரந்தர தீர்வு காணலாம். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு செய்து கொள்ளலாம். எனவே, இப்படிப்பட்ட உன்னதமான வாய்ப்பை பொதுமக்களும், வழக்காளர்களும் பயன்படுத்திக் கொண்டு வழக்குகளே இல்லாத நிலையை ஏற்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், தேசிய மக்கள் நீதிமன்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும், பேரணியில் கலந்துகொண்ட அனைவருக்கும் விதைப்பந்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில், குடும்ப நல நீதிபதி நாகராஜன், கூடுதல் மாவட்ட நீதிபதி தாமோதரன், சிறப்பு மாவட்ட நீதிபதி அமுதா, மாவட்ட அமர்வு நீதிபதி சுதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரியா, சிறப்பு சார்பு நீதிபதி அஷ்வஹ் அகமது, முதன்மை சார்பு நீதிபதி மோகன்ராஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதி யுவராஜ், இருதயமேரி, நீதித்துறை நடுவர்கள் கார்த்திக் ஆசாத், வர்ஸ்தவா, வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சத்தியநாராயணன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். பேரணிக்கான ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செய்திருந்தனர்.

The post பிரசார வாகனம் மூலம் விழிப்புணர்வு குறும்படம் appeared first on Dinakaran.

Related Stories: