தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை-லண்டன் நேரடி விமான சேவை பாதிப்பு: மாற்று வழியில் செல்வதால் பயணிகள் அவதி

சென்னை: லண்டனில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து லண்டன் செல்லும் நேரடி விமான சேவை கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து லண்டனுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், நேரடி விமான சேவையை தினமும் இயக்கி வருகிறது. இந்த விமானம் தினமும் அதிகாலை 3.15 மணிக்கு லண்டனில் இருந்து சென்னை வந்து விட்டு, மீண்டும் அதிகாலை 5.30 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்டு செல்லும். சென்னை -லண்டன் இடையே நேரடி விமான சேவை என்பதாலும், மேலும் லண்டன் சென்று அங்கிருந்து ஸ்காட்லாந்து, பிரேசில், ரோம், பாரிஸ், நியூயார்க், வாஷிங்டன், சிகாக்கோ உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இணைப்பு விமானங்கள் அதிக அளவில் இருப்பதாலும், சென்னை-லண்டன் இடையே இயக்கப்படும் தினசரி விமானத்தில், பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், கடந்த ஒரு வாரமாக இயக்கப்படவில்லை. இதனால் சென்னையிலிருந்து லண்டன் செல்ல வேண்டிய விமான பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் தற்போது துபாய், கத்தார், அபுதாபி, பிராங்க்பர்ட் வழியாக லண்டன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.சென்னையில் இருந்து லண்டனுக்கு நேரடியாக செல்லாமல் மாற்று வழியில் இணைப்பு விமானங்கள் மூலம் செல்வதால் பயணிகளுக்கு பயண நேரம் அதிகரிப்பதோடு, அதிகமான செலவு உள்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் பயணிகள் சென்னையில் இருந்து லண்டனுக்கு நேரடி விமான சேவையை மீண்டும் இயக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் தலைமையகமான லண்டனில், சர்வர் பிரச்னை உள்ளிட்ட தொழில்நுட்ப கோளாறுகள் திடீரென ஏற்பட்டுள்ளதால், சர்வதேச அளவில் இயக்கப்பட்டு வந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கோளாறு சீர் செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஓரிரு தினங்களில், தொழில்நுட்ப கோளாறுகள் முழுமையாக சீரமைக்கப்பட்டு, சென்னை-லண்டன்-சென்னை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மீண்டும் வழக்கம்போல் இயங்கும்’ என கூறினர்.

The post தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை-லண்டன் நேரடி விமான சேவை பாதிப்பு: மாற்று வழியில் செல்வதால் பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: