காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது காவிரி மேலாண்மை ஆணையம்..!!

டெல்லி: காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்கான எஞ்சியுள்ள நாட்களுக்கு தேவையான 24,000 கனஅடி நீரை நாள்தோறும் உடனடியாக திறந்துவிட வேண்டும் என்றும், செப்டம்பர் மாதம் திறந்துவிட வேண்டிய 36.76 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு திறப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த 26ம் தேதி விசாரித்தது.

நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்து காவிரியில் இருந்து உரிய நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட பிறப்பித்த உத்தரவுகளை கர்நாடகம் அமல்படுத்தியிருப்பது குறித்த அறிக்கையை செப்டம்பர் 1ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் 21 பக்கம் கொண்ட ஒரு விரிவான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், 30 ஆண்டு சராசரி நீர் இருப்புடன் ஒப்பிட்டு பற்றாக்குறை கால பங்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு நீர் வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கர்நாடகம் செயல்படுத்தி உள்ளது. ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரையிலான 15 நாட்களுக்கு 1,49,898 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. ஆகஸ்ட் 29 முதல் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு நாள்தோறும் 5000 கன அடி நீரை திறந்து விடுவதை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளது. காவிரி டெல்டாவில் உள்ள நிலத்தடி நீரை கணக்கில் கொள்ளவேண்டும் என்ற கர்நாடகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

The post காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது காவிரி மேலாண்மை ஆணையம்..!! appeared first on Dinakaran.

Related Stories: