ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏஆர்டி கூட்டு மருத்துவ சிகிச்சை மையம்; ரூ.32.5 லட்சம் செலவில் ரத்த சுத்திகரிப்பு மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஏ.ஆர்.டி கூட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மையத்தை திறந்து வைத்து, ரூ.32.5லட்சம் செலவில், 5 ரத்த சுத்திகரிப்பு அலகுகளுடன் புதிய ரத்த சுத்திகரிப்பு மையம் மற்றும் நகர்புறங்களில் சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவத் திட்டம் தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், இலவச ஏ.ஆர்.டி கூட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட 300 பேர் பயனடைவார்கள்.

இதன் மூலம் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக ஏ.ஆர்.டி கூட்டு மருத்துவ சிகிச்சை, அவ்வப்போது ஏற்படும் உபாதைகளுக்கான சிகிச்சை, எச்.ஐ.வி தொற்று கிருமி அளவு பரிசோதனை, நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படும். எச்.ஐ.வி தொற்றால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்ட சுமார் 6,786 குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவு மற்றும் கல்விக்காக ரூ.25 கோடி அரசு வைப்பு நிதி மூலம் வரும் வட்டித் தொகையில் செலவிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆண்டு தோறும் சுமார் 30 லட்சம் பொதுமக்களுக்கும், 12 லட்சம் கருவுற்ற தாய்மார்களுக்கும் இலவச எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 1,28,324 லட்சம் எச்.ஐ.வி நோயாளிகளுக்கு இலவச ஏ.ஆர்.டி கூட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியளவில் எச்.ஐ.வி பாதிப்பு 0.22% ஆக உள்ளது, தமிழ்நாட்டில் எச்.ஐ.வி பாதிப்பு 0.17 % ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 2,976 தொற்று கண்டறியும் நம்பிக்கை, 68 ஏ.ஆர்.டி கூட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே எச்.ஐ.வி நோய் குறைந்த மாநிலமாக இன்று தமிழ்நாடு திகழ்கிறது. சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனை ரூ.2 கோடி செலவில் அனைத்து நகர்புற, ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்படும் என்ற திட்டம் சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஊரக ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி வைக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அனைத்து ஊரக பகுதிகளிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் தொடங்கிய ஜூலை 10ம் தேதி முதல் கடந்த 20ம் தேதி வரை 5,09,664 பேர் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 83,430 பேர் துணை சுகாதார நிலையங்களிலும் என மொத்தம் 5,93,094 பேர் பயனடைந்துள்ளனர். தற்போது நகர்புறங்களில் செயல்படுத்தும் வகையில் பரிசோதனைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ரத்த சுத்திகரிப்பு அலகுகள் மூலம் வாரத்திற்கு 3 நாட்கள் சுழற்சி முறையில் டயாலிசிஸ் சிகிச்சை செய்யப்பட்டு சுமார் 50 சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் பயன்பெறுவர்கள். இவ்வாறு அவர் கூறினர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத் திட்ட இயக்குநர் ஹரிஹரன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சாந்திமலர், ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், சென்னை மாநகராட்சி நகர்நல அலுவலர் ஜெகதீசன், ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி ஒருங்கிணைப்பு அலுவலர் ரமேஷ், பேராசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர்.

The post ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏஆர்டி கூட்டு மருத்துவ சிகிச்சை மையம்; ரூ.32.5 லட்சம் செலவில் ரத்த சுத்திகரிப்பு மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: