மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி: குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில், நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே, லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் நடைபெறும், என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மீஞ்சூரில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் நாளை காலை 10 மணி முதல் 31ம் தேதி காலை 10 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, மாற்று ஏற்பாடாக, மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளுக்கு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும்.

எனவே, பொதுமக்கள், முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு வாரியத்தின் https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம் போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி: குடிநீர் வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: