பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் 6வது வார ஆடி திருவிழா கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

 

ஊத்துக்கோட்டை, ஆக. 28: பெரியபாளையத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் ஆடித்திருவிழா கடந்த ஜூலை 17ம் தேதி தொடங்கியது. இந்த விழா சனி, ஞாயிற்றுக்கிழமை என 14 வாரங்கள் நடைபெறும். இத்திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு வாகனங்களில் வந்து சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வந்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

அவ்வாறு ஆடித்திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, மூலக்கடை, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அரசு பேருந்துகள், மாநகர பேருந்துகள், தனியார் பேருந்துகள் என நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கார், ஜீப், வேன், டிராக்டர், மாட்டு வண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் பெரியபாளையம் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். இதனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இங்கு வருகிறது. இதனால் பெரியபாளையத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்நிலையில் நேற்று 6 வது வாரம் ஆடித்திருவிழா என்பதால், கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் கோயிலுக்கு வந்தது. இதனால் சென்னை-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள பெரியபாளையம் பாலத்திலும், கும்மிடிபூண்டி-திருவள்ளூர் நெடுஞ்சாலையிலும் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கனரக வாகனங்கள் சாலை ஓரங்களிலேயே நிறுத்தப்பட்டது. பெரியபாளையத்திலிருந்து வடமதுரை மற்றும் தண்டலம், குமரப்பேட்டை, பனப்பாக்கம் வரையிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை வரை சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். மேலும் மழை பெய்ததால் பக்தர்கள் தங்க இடமில்லாமல் கடும் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து பக்தர்கள் மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது, இந்த வாரம் 6வது வாரம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. நாங்கள் அம்மனை தரிசனம் செய்து விட்டு வந்து வாகனங்களை எடுத்துச்செல்ல முடியல்லை. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பெரியபாளையம் பஜார் பகுதியில் சாலையை ஆக்ரமித்துள்ள கடைகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும். மேலும் கிடப்பில் போடப்பட்ட பெரியபாளையம் புறவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கூறினர்.

The post பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் 6வது வார ஆடி திருவிழா கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: