மதுரை ரயில்நிலையம் அருகே நேற்று அதிகாலை நின்றிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் சமையல் காஸ் சிலிண்டர் வெடித்ததில் கொழுந்துவிட்டு எரிந்தது. இவ்விபத்தில், அந்த ரயில் பெட்டியில் இருந்த உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த 9 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகிவிட்டனர். பின்னர் அந்த 9 பேரின் சடலங்களுக்கும் மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அந்த சடலங்கள் பதப்படுத்தப்பட்டு, நேற்றிரவு 3 ஆம்புலன்ஸ்கள் மூலமாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த 9 பேரின் சடலங்களை ஏற்றி வந்த 3 ஆம்புலன்ஸ்களும் இன்று காலை 8 மணியளவில் சென்னை பழைய விமானநிலையத்தின் கார்கோ பிரிவுக்கு வந்து சேர்ந்தன. பின்னர் அந்த 9 சடலங்களும் கார்கோ பிரிவு அருகே உள்ள இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன கார்கோ பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 9 சடலங்களுக்கும் முறைப்படி நடைமுறைகள் நடந்தன. பின்னர் ஒரே விமானத்தில் 9 சடலங்களும் அனுப்பி வைக்க முடியாது என்பதால் காலை 11.30 மணியளவில் பெங்களூரு வழியாக லக்னோ செல்லும் விமானத்தில் 4 சடலங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, மதியம் 12.05 மணியளவில் 5 சடலங்கள் லக்னோ அனுப்பி வைக்கப்பட்டன.
இதே விமானத்தில் தீ விபத்தில் லேசான காயம் அடைந்த 14 பேரும் லக்னோ அனுப்பி வைக்கப்பட்டனர்.அவர்களுடன் ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் உடன் செல்கின்றனர். பின்னர் அந்த 9 சடலங்களையும் லக்னோவில் உ.பி மாநில அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
The post மதுரை ரயில்பெட்டி தீ விபத்தில் இறந்த 9 பேரின் சடலங்கள் ஆம்புலன்சில் சென்னை வருகை: விமானத்தில் லக்வுக்கு அனுப்பிவைப்பு appeared first on Dinakaran.
